பக்கம்:ஒத்தை வீடு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 175 சித்திக்காரியான லட்சுமி வாசல் காலில் நின்றபடியே, கணவனை புருவச் சுழிப்போடு பார்த்தாள். அவர் விளக்கினார். "இவனுக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கும்போல தோணுது. எதுக்கும் கொஞ்சம் பழைய சாதத்த எடுத்துட்டு வா இவன் சிறுநீர கலந்து பார்க்கலாம்." "நேற்று ராத்திரி நல்லாத்தானே சாப்பிட்டான்." "நேற்று ராத்திரி கிடக்கட்டும். இப்போ சாப்பிட நினைச்சாலே வயிறு குமட்டுதாம்." "என்ன வயிறோ" சித்திக்காரி, பழையபடியும் - அதேசமயம் பாதியளவு மட்டுமே முருங்கை மரத்தில் ஏறினாள். நேற்று கணவரிடம் எதிர்பார்த்தது கிடைக்காததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினாள். என்றாலும், ஒரு தேங்காய் சிறட்டையில், பழைய சாதத்தை வைத்து குளியலறையில் வைத்து விட்டுப் போனாள். அவள் வெளியே வந்ததும், செல்வா உள்ளே போனான். பத்து நிமிடம் கழித்து சித்தப்பா போனார். வெள்ளைச் சாதம் மஞ்சளாகவில்லை. அவன் இமைகளை விலக்கி, விழிகளைப் பார்த்தார். மஞ்சள் நிறம் இல்லை. காமாலை இல்லை என்று கண்டறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சி. ஆனாலும், டாக்டரிடம் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார். உடல் நிலை என்று வரும்போது, சுய அனுமானமும் சுய மருந்தும் தவறானவை என்பதை புரிந்து வைத்திருப்பவர். அண்ணன் மகனுக்கு சிறிது அதட்டலாக ஆணையிட்டார். "சீக்கிரமா டிரெஸ் பண்ணுடா. எனக்குத் தெரிந்து, மஞ்சள் காமாலை இல்லை. ஆனாலும், டாக்டர்கிட்ட டெஸ்ட் செய்து பார்க்கலாம்." வேறு வழியில்லாமல், செல்வா, அவசர அவசரமாய் லுங்கியில் இருந்து விடுபட்டு, பேண்ட் சட்டைக்குள் போனான். சித்தப்பா, அவனை கைத்தாங்கலாக நடத்தியபடியே, லட்சுமி. இவனை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறேன் என்ற விளக்கத்திற்கு, ஆங்காரமாக ஊங் கொட்டினாள். வீதி வழியாக, அவனை விலாவோடு சேர்த்து அணைத்தபடி நடத்திக் கொண்டு வந்த சித்தப்பா, அந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டு வரைக்கும் தம்பிடிச்சு நடந்திடு என்றார் போவோர் வருவோர் அந்த இருவரையும் போய்க் கொண்டும், நின்றும் பார்த்தார்கள். செல்வாவிற்கு என்ன என்பது மாதிரி கண்களால் கேட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/175&oldid=762233" இலிருந்து மீள்விக்கப்பட்டது