பக்கம்:ஒத்தை வீடு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 195 பீதியானது. அந்த பீதி தலையணையை விசிறி அடித்தது. கைகளை தரையை அடிக்க வைத்தது. கெட்டுப் போன வாய்க்குள் கைவிட்டு நாக்கை வெளியே எடுக்கப் போனது. நாக்கு வலிக்க வலிக்க அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. சுய கோபம். சென்னைக்கு அனுப்பிய அப்பா மேல் கோபம், அவன் மீது பாசம் வைத்திருக்கும் சித்தப்பா மீது அதே எதிர் விகிதாச்சார கோபம். இந்த வீட்டை விட்டு ஒடிப்போகாமல் கட்டாமல் கட்டிப்போட்டிருக்கும் பிள்ளைகள் மேல் கோபம் சித்தி மேல் கோபக் கோபம். சென்னை மேல் கோபம். எல்லாவற்றிக்கும் மேலாக - கவிதா மேல் கோபம். அவளை நினைக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. இந்த கேடு கெட்டவளுக்கு ஒரு காதல் கடிதம் தேவை. அதற்கு கிடைத்த இளிச்ச வாயன் இவன். சரியான கள்ளி. இவன் உள்ளதை உள்ளபடி ஒன்றுவிடாமல் அவளிடம் சொல்லிவிட்டான். ஆனால், அவளோ, அம்மா ஓடிப்போன விவகாரத்தை சொல்லவில்லை. இவன் கெளரவத்தை இழக்க வைத்து, தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்காத பாவி, அவள் மனதிற்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கிடக்குதோ? வீட்டிற்கு வரச் சொன்னவளே அந்த பழிகாரிதான். அப்பனுடன் டூரில் போவதை சொல்ல நினைத்திருந்தால் அவள் சொல்லி யிருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனமற்றவள். இவளைவிட இந்த மோகனன் எவ்வளவோ மேல். அவனுக்கு மட்டும் இந்தக் கெட்டப் பழக்கம் இல்லையானால் அவனைவிட நல்லவனை காணமுடியாது. கெட்ட பழக்கம் மட்டும்தானா அது? தானும் கெட்டு பிறத்தியாரையும் கெடுக்கும் பழக்கம். ஒரு தொற்று வியாதி. அவனிடம் இந்த கவிதாவுக்கு எழுதிய கடிதம் இருக்கும் வரை வாய் கெட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வாயா? இல்லை. இரண்டு வாய்கள். இந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். சித்தப்பாவிடமோ, பிள்ளைகளிடமோ வாலாட்டக்கூடாது என்று அந்தப் பொட்டப் பயலை கத்தியோடு போய் எச்சரிக்க வேண்டும். நேற்று வாக்களித்தபடி அந்த மோகனன் மட்டும் தலையெழுத்தாய் மாறிப்போன தன் கையெழுத்திலான கடிதத்தை மட்டும் கொடுக்காது போனால் - செல்வாவின் கைகளே ஆயுதங்கள் போல் நீண்டன. விரல்கள் திரிசூலப் பாணியில் பத்து சூலங்களாய் ஆகிப்போயின. பின்னர் அவன் சிந்தனையில் தேக்கம் ஏற்பட்டது அப்படியே தூங்கிப் போனான். எவரோ அடித்துப் போட்டது மாதிரியான துக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/195&oldid=762255" இலிருந்து மீள்விக்கப்பட்டது