பக்கம்:ஒத்தை வீடு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு, சமுத்திரம் 201 ஆப்பிள் வடிவங்களில் ஒரே விதமான மூன்று பொருட்கள். செல்வா, சந்தேகம் கேட்டான். "இது வந்து. அதாவது." செல்வாவின் பார்வை அந்த பொருட்கள் மீது போனபோது, மோகனன் பதிலளித்தான். "உன் யூகம் சரிதான். இந்த மூன்றும் வெவ்வேறு வாசனையைக் கொடுக்கிற டீலக்ஸ் நிரோத்துகள். புத்தம் புதியவை. இம்போர்ட்டட் சரக்குகள். வேணுமுன்னா தொட்டுப் பார்." செல்வா, அந்த மூன்றில் மல்லிகை நிறமும், அதே வாசனையையும் கொண்ட உறையை எடுத்தான். மூக்கில் வைத்தான். சுவாசம் சுவாரசியமானது. மூளைக்குள் அந்த வாசனை பதிந்தது. உடல் முழுக்க வாசனை மயம். செண்பகத்தை எடுக்கப் போனான். அதை தடுக்கப் போனான் மோகனன். கையும் கையும் உரசிக் கொள்ள, உடலும் உடலும் மோதிக் கொண்டன. மோகனன் இப்போது ஆளே மாறிவிட்டான். உருவம் மாறாமலேயே குணம் மாறியது. தங்கை மீது வைத்திருந்த பாசம், தணிந்தது. தூக்குத் தண்டனை கைதியின் கடைசி ஆசை போல் துக்கக் குரலில், தன் ஆசையை வெளிப்படுத்தினான். "மைடியர் பிரதர் இன் லா..! உன்கிட்ட இருந்து ஒரு கடைசி பரிசு வேணும். ஆமாம் டியர். இந்த நிரோத்தை போட்டுக்கிறேன். இதனால் உன் வாய்க்கு சேதாரம் வராது. வயிறு வாந்தியாகாது. எனக்காக கடைசி தடவையாய், உன் ஒத்துழைப்பை கேட்கிறேன். சத்தியமாய் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலே இந்த வீட்டில் நான் இருந்தால் நீ ஒன் செருப்பாலேயே என்னை அடி ஒன் லி ஒன் டைம். இப்படி டெம் டேஷன் வருமுன்னுதான் உன்னை இந்த வீட்டுப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்கு நான் உத்தரவு மாதிரி போட்டேன். ஆனாலும், நான் வற்புறுத்தலப்பா. நம்மோட நிரந்தர பிரிவுக்கு பரிசாத்தான் கேட்கிறேன்." செல்வா, மோகனனையே பார்த்தான். நேற்றிரவு, அவன் தன்மீது காட்டிய பரிவு ஒரு தாட்சண்யமானது. அதோடு, அந்த வெள்ளையன் மேல் புரண்டதில், கிடைக்காத சுகம் ஒன்று கிடைத்ததும் நினைவுக்கு வந்தது. செல்வா, அந்த செண்பக வாசனை உறையை எடுத்துக் கொண்டான். பிறகு, ரகசிய பேசுவதுபோல் பேசினான். "முதலில் நீ. அப்புறம் நான். ஆனாலும் வேற மாதிரி." அவர்கள் இருந்த அறையின் திறந்த கதவு, ஒரு சின்ன தீண்டலில் வெட்கப்பட்டதுபோல் வாசலோடு ஒட்டிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/201&oldid=762262" இலிருந்து மீள்விக்கப்பட்டது