பக்கம்:ஒத்தை வீடு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 245 'ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க, ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்." செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான் "பாலினம் என்பது ஈரினம் - அதில் ஓரினம் என்பது பாலின ஊனம். கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?" நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ. அனுபல்லவியோ. அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மெளனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். "கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல." "நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/245&oldid=762310" இலிருந்து மீள்விக்கப்பட்டது