பக்கம்:ஒத்தை வீடு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 39 சங்கரி, மாமரத்தை நோக்கி நடந்தாள். பின்னர், குதிப் பாய்ச்சலாய்ப் போனாள். உடல் முழுக்க ஆவேசம். மனம் முழுக்க ஆதங்கம். அந்த ஆவேசததையும் ஆதங்கத்தையும் உள்ளடக்க முடியாமல், ஒரே ஒட்டமாய் ஓடினாள். மேலே தொங்கிய காய்களுக்குக் கண்களால் குறி போட்டாள். அத்தனையும் தலைக்கு ஒரு முழத்திற்கும் அதிகமான உயரத்தில், பிடி பார்க்கலாம் என்பது போல் பார்த்தன சங்கரி, வலது கையை நீட்டி குதித்தாள். குறிப்பறிந்த மாங்காய், வலதுபக்கம் போனது. உடனே அவள் இடது கையைத் துக்கிக் குதித்தாள். அது வலது பக்கம் போனது கைப்பக்கம் வருவது மாதிரி வந்து கண் காணாத இலைப் பிரதேசத்திற்குள் மறைந்தது. இன்னொரு பிஞ்சு, அவளை இளக்காரமாய்ப் பார்த்தது. அவள் குதித்தாள். குதி குதியென்று குதித்தாள். காய்களுக்காக குதித்தவள், இப்போது அவற்றின் நினைப்பற்று, சும்மாவே குதித்தாள். அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தாவினாள். குதியற்று மேலே போய், பிடியற்றுக் கீழே விழுந்தாள். காய்கள் சிரித்தன. இலைகள் பரிகசித்தன. கிளைகள் அவள் தலையில் அடித்தன. கண்களைப் பிராண்டின. உமா, ஒடி வந்தாள். பேசிக்கொண்டே ஓடி வந்தாள். "சங்கரி! முடியாட்டால் விட்டிடு. எப்பவுமே கொப்பை வளைத்துப் பிடித்து வசப்படுத்திக் கிட்டுத்தான், காயைப் பறிக்கணும்." சங்கரிக்கு, மூச்சிரைத்தது. அவள் பிடித்த கிளைகளும் மூச்சிழைப்பது போல் அங்கும் இங்குமாய் ஆடி ன மாமர பச்சை அனைத்தையும் ஒன்று திரட்டி, அழுத்தப் பச்சையாகத் தோன்றிய கன்னிக் காய்கள், இலை மாராப்பில் அடைக்கலம் கொண்டு, அவளைப் பரிகசித்தன. மீண்டும் குதிக்கப் போன சங்கரியை, உமா பிடித்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப்படுத்தி, மாமரத்தின் கீழே உள்ள மணல் திட்டில் உட்கார வைத்தாள். தற்செயலாக உமா திரும்பியபோது, கொல்லைக் கதவின் பின்பக்கம் காந்தாமணி கைகளைக் கேள்விக்குறியாக்கி, அவளைப் பார்த்து முக மாட்டினாள். உமா, சமர்த்தானாள். "என்ன சங்கரி இப்படியா குதிக்கிறது? நேத்துக் கூட, நீ உண்டாயிருக்கலாம் கரு என்னாகிறது? கலைஞ்சிடாது.” சங்கரி, ஆகாயத்தைப் பார்த்தாள் கைக் கெட்டாத அந்த மாங்காய்களைப் பார்த்தாள். உ மா, அவளை மீண்டும் உலுக்கினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/40&oldid=762332" இலிருந்து மீள்விக்கப்பட்டது