பக்கம்:ஒத்தை வீடு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 59 "ஆமா. நான்தான் எங்கம்மா பித்துக்குளின்னு சொல்லியிருக் கேனே. காலையில அவளுக்குப் போட்டியா கூடக் கூடப் பேசினியாமே." சங்கரி, வெடித்தாள். எரிமலையான வார்த்தைகள். பூகம்பமாய்ப் போன விமர்சனம். "எல்லாம் தலைவிதி. ஒங்களால இது முடியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன். ஏன் வம்புச் சண்டைக்கு சாக்கு தேடுறீங்க.." சங்கரி, அவனது எதிர்த் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாரானது போல் உடம்பை விறைப்பாக்கினாள். முகத்தைக் கடுமையாக்கினாள். வாயில் சில வார்த்தைகளைச் சுமந்தாள் ஆனாலும் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புக்கூட கேட்டகவில்லை. படுக்கைமட்டும் லேசாய் ஆடி அடங்கியது. எல்லாமே அடங்கிப்போன அல்லது அடக்கப்பட்ட வெறுமை. காலம் நிமிடங்களாய் கழிந்து கொண்டிருந்தது. சங்கரி, அவன் பக்கமாய்த் திரும்பினாள். ஜன்னல் கம்பிகள் வழியாய் ஊடுருவிய நிலா வெளிச்சத்தில் அவன் மங்கலாய்க் கிடந்தான். கண்களைத் திறந்து வைத்திருந்தான். கைகளை விரித்துப் போட்டிருந்தான். தற்செயலாய் அவள் காலில்பட்ட தன் காலை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டான். திறந்திருந்த கண்களை இமைகளால் பூட்டிக் கொள்ளாமல், கைகளால் மறைத்துக் கொண்டான். சங்கரிக்கு, என்னவோ போலிருந்தது. இப்போதுதான், தான் சொன்னதின் தாத்பரியம் அவளுக்கு முழுமையாய்ப் புரிந்தது போலிருந்தது. ஒடி. ஒடி புறமுதுகு காட்டியவனை, அப்படி சொற்குடு போட்டது, தவறு. ஆயிரமிருந்தாலும், அவர் கணவர் அந்தக்குறை தவிர, எந்தக் குறையுமில்லாத மனிதர். அவரை மீறிப்போன செயலின்மை. மனதும் உடம்பும் எதிரெதிராய்போன கொடுமை. ஒன்றோடு ஒன்று மல்லுக்கு நிற்கும் கொடுரமான யதார்த்தம். இந்த இரண்டிற்கும் இடையே, இவர் பிள்ளைப் பூச்சியாய் இடையில் அகப்பட்டுத் தவிக்கிறார். மனமிருந்தும் மார்க்கமற்றத் தன்மை: 'இப்படிப்பட்ட நோயாளி மாதிரியான ஒருவரை நோகடித்தாச்சு அய்யோ.. எனக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு ராட்சஷியா..? அன்றைக்கு அவர் சொன்னது போல் நான் ஒரு காட்டுமிராண்டிதான். மனுவி இல்லை . இப்படியா கேட்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/60&oldid=762354" இலிருந்து மீள்விக்கப்பட்டது