பக்கம்:ஒத்தை வீடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஒத்தை வீடு "இன்னைக்கு, நான் வேலையில சேரப் போறேன். சாஸ்திரி பவன்ல. வேலை கிடைத்திருக்கு. நீங்க, என்னை பைக்ல கூட்டிட்டு போகணும். நீங்களே என்னை அங்கே வேலையில் சேர்க்கணும். ஆபீஸ்ல இருந்து திரும்பும்போது என்னை பிக்அப் பண்ணனும். ஒண்ணா போய் ஒண்ணா வரணும். புறப்படுங்க..!" அவள் உலுக்கிய உலுக்கலில், அவன் குலுங்காமல் நின்றான். எதிர்ப் பால்கனிக்காரனிடம், என்ன பேசினாள் என்பது கேட்கவில்லை. ஆனால், ஏதோ பேசினாள். என்னைப் பார்த்ததும் நடிக்கிறாள். அவன் கூட்டிக்கொண்டு போவதாக, இருந்த ரகசிய ஏற்பாட்டிற்கு, நான் பகிரங்கமான மாற்று ஆள். மனோகர், ஒரு முடிவுக்கு வந்தவன்போல், அவளை அதட்டாமலும், அன்பைக் கொட்டாமலும் கேட்டான். ஆர்டரைக் காட்டு. சங்கரி, வியந்து போனாள்; மகிழ்ந்து போனாள். ஆவேச உணர்வுகள் ஆனந்த உணர்வுகளுக்கு வழிவிடவில்லை. ஆனாலும் அவை அடங்கிப் போயின. கைப்பை இருக்கும் அலமாரிப்பக்கம் அசைந்தாடிப் போனாள். அந்தப் பையைக் கொண்டு வந்து, அதன் விலாவைக் கிழித்து, ஒரு காகிதத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டே அவனிடம் நீட்டினாள். அவன் தோளில் முகம் போட்டபடியே நின்றாள். மனோகர், அந்த காகிதத்தின் மடிப்பை நீக்கினான். அதன் மேலும் கீழுமாய் கண்களைச் சுழற்றினான். அரைக்கணத்தில் அந்த அரசாங்க முத்திரைக் காகிதத்தை இரண்டாகக் கிழித்தான். அதைத் தடுக்கப் போனவளை ஒரே தள்ளாய்த் தள்ளி தரையில் போட்டுவிட்டு, கிழித்தவற்றைக் கிழித்தான். இரண்டை நாலாய், நாலை பதினாறாய். சுக்கு நூறாய் கிழித்தான். உள்ளங்கையில் பாதி அளவிற்குத் தேறிய அந்த காகிதச் சில்லுகளை, கீழே கிடந்தவளின் தலையில் போட்டான். முழக்கமிட்டான். "ஒன்னை கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றியா. கூட்டிக் கொடுக்கச் சொல்றியா. ப்ால்கனியில் கொஞ்சிக் குலாவினியே. அந்தப் பயலைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்ல வேண்டியது தானே சொல்லாமலா இருப்பே. இந்த வீட்ல நீ இனிமே ஒரு நொடி கூட, நீ இருக்கக் கூடாது." சங்கரி, குப்பைத் தொட்டியாய் எழுந்தாள். கண்களைச் சரித்துப் பார்த்தாள். இரையை கழுகு பார்க்குமே. அப்படிப்பட்ட பார்வை. அவளுக்குள் பரிபாலனம் செய்த உள்ச்செல் நரம்புகளும் வெளிச் செல் நரம்புகளும் முரண்பட்டுச் செயல்படுவதுபோல் முகத்தைக் கோணலாக்கினாள். மூளையின் உடலாதிக் கத்தையும், மனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/83&oldid=762379" இலிருந்து மீள்விக்கப்பட்டது