பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௩௭

கொண்டமையால், தமிழில் மனம், ஆன்மா என்பவற்றைக் குறிக்கச் சொல்லில்லையென்றும், திரவிடம், சேரன், சோழன், பாண்டியன் என்னும் பெயர்கள் வட சொற்கள் என்றும், இன்ன என்னும் வடிவிற்கொத்த அகரச் சுட்டடிச்சொல் தமிழிலில்லை யென்றும், பிறவாறும் பிழைபடக் கூறினர்.

உவில்லியம் (William), கோல்புரூக் (Colebrooke), மூய்ர் (Muir) முதலியவரோவெனின், தமிழைச் சிறிதுங் கல்லாது, வடமொழியிலேயே மூழ்கிக் கிடந்து, இந்திய நாகரிக மெல்லாம் ஆரிய வழியாகக் கூறிவிட்டனர்.

மொழிநூற்கலையும் நூலாராய்ச்சியும் வரவர வளர்ந்து வருகின்றன. ஆகையால், சென்ற நூற்றாண்டில் தோன்றிய பல மொழிநூற் கருத்துகள் இந் நூற்றாண்டில் அடிபடும். பார்ப்பனர், ஆரியத்தை உயர்த்திக்கூறிய மேனாட்டார் சிலரின் கூற்றுகளைத் தங்கட்கேற்ற சான்றுகளாகப் பற்றிக் கொண்டு, அவற்றை மாற்றுகின்ற புத்தாராய்ச்சி தோன்றாத படி, பல வகையில் தமிழரை மட்டந்தட்டி வருகின்றனர். மேனாட்டில், உண்மை காணவேண்டுமென்று பெருமுயற்சி நடந்துவருகின்றது; ஆனால், கீழ்நாட்டிலோ உண்மையை மறைக்கவேண்டுமென்றே பெருமுயற்சி நடந்துவருகின்றது. கால்டுவெல் கண்காணியாரின் திராவிட ஒப்பியல் இலக்கணத்தின் முதலிரு பதிப்புகளிலும், இல்லாத (திராவிட நாகரிகத்தையிழித்துக்கூறும்) சில மேற்கோள்கள், மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் மொழிநூற் கலையின் முன்னேற்றத்தைக் குறியாது பிற்போக்கையே குறிக்கும்.

II. பண்டைத் தமிழகம் - குமரிநாடு[1]

1. குமரிநாடு

i. அகச்சான்றுகள்:—

தெற்கே, இந்துமா கடலில், ஒரு பெருநிலப்பரப்பிருந்ததென்றும், அதுவே பண்டைப் பாண்டிநாட்டின் பெரும்பகுதி


  1. பண்டைத்தமிழகம் (The original Home of the Dravidan Race)குமரிநாடே என்று.யான் எழுதிய நூலை 1938 ஆம் ஆண்டு நவம்பர் -மீ எனக்குக் 'கீழ்கலைத்திறவோன்' பட்டத்(MOL Degree)திற்கு,இடுநூலாக (Thesis),சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விடுத்தேன். மூன்றாமாதம் அது தள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழக அறிவிப்பு வந்தது என் இடுநூலை ஆய்ந்தவர் யாரென்றும், தள்ளினதற்குக் காரணங்கள் எவையென்றும் பல்கலைக்கழகத்திற்கு எழுதிக் கேட்டதற்கு, அவை மறைபொருள் என்று பதில் வந்துவிட்டது.