பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௮

ஒப்பியன் மொழிநூல்

இனி, புறப்பொருளையும், போர்த்தொழிலொன்றே கூறுவதென்றும், பிற கலைவளர்ச்சியைத் தடுப்பதென்றும் குறை கூறுகின்றனர் சில பார்ப்பனர். பிறமொழிகளிலில்லாத பொருளிலக்கணத்தை வகுத்த தமிழர், அங்ஙனம் பொருளிலக் கணத்தைக் குன்றக் கூறுவரா என்றும் சற்று நினைத்திலர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணைகளில் அரசர்க்கும் மறவர்க்குமுரிய போர்த்தொழிலைச் சிறப்பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலைகளையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகைகளையும் அடக்கினர் முன்னையிலக்கணிகள்.

வாகைத்திணையின் இலக்கணமாவது :—

“வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” [1] என்பது.

வாகைத்திணையின் பாகுபாடாவது :—

“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையான்
தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்” [2] என்பது.

பண்டை யுலகில் மறம் சிறந்த குணமாகக் கருதப்பட்டதாலும், பகையரசரைப் போராலடக்கினாலன்றிக் குடிகட்குப் பாதுகாப்பும் தொழில் நடைபேறு மின்மையானும், கலைகளை வளர்க்கும் அரசர் நூல்வாயிலாய்ப் புகழப்படற்குரியராதலானும், அரசர் தொழிலைத் தலைமைபற்றிச் சொல்லவே குடிகள் தொழிலும் ஒருவாறு அதனுள் அடங்குதலானும், போர்த் தொழில் பொருளிலக்கணத்திற் சிறப்பாய்க் கூறப்பட்டதென்க.

சான்றோன் என்னும் தமிழ்நாட்டு மறவர் பெயரையும் Knight என்னும் மேனாட்டு மறவர் பெயரையும் ஒப்பு நோக்குக.


  1. தொல். புறத்.18
  2. தொல்.புறத். 20