பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪௶

ஒப்பியன் மொழிநூல்

ஆலாபனை, ஆலாபனம் என்னப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் வேர் ஆல் என்னும் தமிழ்ச்சொல்லே. ஆலுதல் சுற்றுதல், ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக.

ஆரோசை, அமரோசை, அலுக்கு என்பவற்றுக்குப் பதிலாக, இப்போது, முறையே ஆரோகணம், அவரோகணம், கமகம் என்ற வடசொற்கள் வழங்குகின்றன.

பாட்டென்பது பண்ணுக்கமைந்த செய்யுள். பண்ணென்பது தனியிசை. இசையொடு சொல்லும் சேர்ந்தது பாட்டு. பாட்டை இன்று கீர்த்தனை என்பர். கடவுளின் கீர்த்திபற்றியது கீர்த்தனை.

சீர்த்தி — கீர்த்தி. “சீர்த்தி மிகுபுகழ்” என்பது தொல்காப்பியம். சீர் + தி = சீர்த்தி. கீர்த்தனை திருப்புகழ் என்றாற் போல்வது. கீர்த்தனைச் செய்யுள் கொச்சகக்கலி, அதன் திரிபான பரிபாடல் என்பவற்றினின்றும் பிறந்ததாகும்.

தோற்கருவிகள் “பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை,கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை” முதலியன.

இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழு வகைப்படும்; மீண்டும் பாடன்முழா (கீதாங்கம்), நட முழா (நிருத்தாங்கம்), பொதுமுழா (உபயாங்கம்) என மூவகைப்படும். இக் கருவிகளை யெல்லாம் செய்தவரும் இயக்கினவரும் தனித் தமிழரேயன்றி ஆரியரல்லர்.

துளைக்கருவி குழல், நாகசுரம் முதலியன. பாம்பாட்டியின் குழலிலிருந்து தோன்றினமையால் நாகசுரம் எனப் பட்டது.

நரப்புக்கருவி பலவகைப்படும். அவற்றுள் ஐந்து பெருவழக்கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு). செங்கோட்டியாழ் (7 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) என்பன.

நரப்புக் கருவிகளெல்லாம் பண்டைக்காலத்தில் யாழ் என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட்டி யாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும்.