பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௬௧௭

பாட்டுத்தொழிலால் மதிப்பு, வருவாய் முதலிய பயன்களைக் கண்ட பார்ப்பனர், பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பால், பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் முதலாவது நரப்புக்கருவியும், பின்பு துளைக்கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் தொடங்கியிருக்கின்றனர்; ஆயினும், புல்லாங்குழல் மிருதங்கம் போன்ற மதிப்பான கருவிகளையே பயில்வர்.

பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர் இசைபயின்று அதைக் குலத்தொழில்போல ஆக்கிக்கொண்டமையாலேயே, தியாகராஜ ஐயர் என்னும் பார்ப்பனர் தலைசிறந்த இசைப் புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதை அறிதல் வேண்டும்.

நாடகத்தமிழ் (Dramatic Literature)

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்” [1]

“கூத்தர் விறலியர். . . . . வாயில்கள் என்ப” [2]

என்பவற்றால், தொல்காப்பியர் காலத்து நாடகமுண்மை யறியப்படும்.

நாடகம் என்பது நடி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயர். நடி + அகம் = நாடகம். (முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர்). நடி + அம் = நடம் -—நட்டம். நட்டம்—நிருத்தம் (வ). ஒ.நோ : வட்டம் — விருத்தம் (வள் + தம் = வட்டம்). நாடகம் கதை தழுவிவரும் கூத்து. நடம் நட்டம் என்பன தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற அபிநயமுள்ளதும். நட்டம் பயிற்று பவன் நட்டுவன். நடம் பயில்பவள் கணிகை. நாடகமாடுபவள் நாடகக் கணிகை. தாளத்தைக் கணித்தாடுவதால் கணிகை யென்று பெயர். கணிகையை இக்காலத்தில் தாசியென்பர். தாசி = அடியாள், தேவடியாள். தனிக்கூத்திற்குத் தாண்டவம் என்னும் பெயர். தாண்டியாடுவது தாண்டவம். தாண்டுதல் — குதித்தல்.

நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு. முதன்முதல் நடித்தது ஒருவனைப்போல் நடந்து காட்டியதே. நட என்னும் சொல்லே “அம்” ஈறுபெற்று நடம் என்றானது


  1. தொல். அகத். 56
  2. தொ. கற்பு. 52