பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௪௧

பிறைக் காலத்தை இருட்பக்கமென்றும்[1] முன்னோர் கூறினர். இவற்றையே, முறையே, சுக்கிலபக்ஷ மென்றும் கிருஷ்ணபக்ஷ மென்றும், நிலைமொழிகளை மொழி பெயர்த்தும் வருமொழிகளை எழுத்துப் பெயர்த்துங் கொண்டனர் ஆரியர்.

சில ஓரைப்பெயர்களின் மூலங்களாவன :

மேழகம் — மேடகம் — மேடம் — மேஷம் (வ,)ஒ.நோ . புழலை — புடலை, நாழுரி — நாடுரி, விடை — விடபம் (வ்ருஷபம், வ.) — இடபம், கும்— கும்பு— கும்பம். கும்பு + அம் = கும்பம். கும்புதல் — குவிதல். மின் — மீன் — மீனம். ஒ.நோ . தின் — தீன்.

கடகம் (நண்டு) என்பது வட்டமானது என்னும் பொரு ளது. தோட்கடகம், கடகப்பெட்டி என்னும் வழக்குகளை நோக்குக. நாழிகை வட்டிலைக் குறிக்கும் கடிகை என்னுஞ் சொல்லும் கடகம் என்பதன் மறுவடிவமே. வட்டமானது வட்டில். கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம். தோட்கடகம் தோள்வளைவி என்றும் கடிகை என்றும் வழங்குதல் காண்க. கடகம் ஒரு பருமைப் பெயருமாகும் [2]

துலை என்னும் சொற்குப் பகுதி, தோல் என்று இந்தியில் வழங்குகின்றது. தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பண்டைத் தமிழ்நூல்களில் தொல் காப்பியந் தவிர மற்றவையெல்லாம் அழிந்துபோனதினாலும், தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கு வேர்கள் தமிழில் மறைந்து விட்டன. வடநாட்டில், ஆரியர் வருமுன் திராவிட மொழிகளே வழங்கி வந்தமையால் சிந்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளில் பல திராவிடச் சொற்கள் கலந்துள்ளன. அவை இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய்க் கூறப்படும்.

மேலும், ஒரு மொழியின் தாய்வழக்கில், ஒரு பொருட்குரிய பல சொற்களில், வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில் தான் வழங்கும். இதுவே 'வழக்கற்றசொல் வழங்கல்' எனமுன்னர்க் குறிக்கப்பட்டது. இது ஒரு தாய்வீட்டிலுள்ள வழங்காத கலங்களையெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது.

தமிழிலுள்ள நோட்டம் என்னும் தொழிற்பெயரின் வேரான நோடு என்பது, கன்னடத்தில் வழங்குதல் காண்க.


  1. சிலப். 28:133
  2. பருமைப்பெயர்— Augmentative