பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௭௪

ஒப்பியன் மொழி நூல்

வடமொழி முதற் பாவியமான வான்மீகியிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன் முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப் பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும்.

இங்ஙனம், உலகத்திலேயே முதன் முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ், இது போது ஒரு புன் மொழியினும் இழிவாயெண்ணப்படுவதற்குக் காரணம், இற்றைத் தமிழரின் அறியாமையும் மடிமையுமேயன்றி வேறன்று.

ஆரியர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்துவைத்தது. அவற்றின் தாழ்வு வெளியாகாமைப் பொருட்டேயன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற்பொருட் டன்று. தமிழிலுள்ள கலை நூல்களை மொழி பெயர்த்தும், அவற்றை விரிவாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக் கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நேரேயறிவிக்கவேயில்லை. மேனாட்டாரே முதன் முதல் அவற்றைக் கற்றுத் தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க்கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதே யென்று, ஆரியர் தம் முன்னோர் கி. மு. 2500 ஆண்டுகட்கு முன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ்விருபதாம் நூற்றாண் டிற்குரிய விழுமிய கருத்துக்களையெல்லாம் பொருத்தியுரைக் கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சியில்லார்க்குப் புலனாகாதுபோயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க;

வடதிசை உயர்ந்ததும் தென்திசை தாழ்ந்ததும்

அகத்தியர் தெற்கே வந்த பின், நிலம் வடதிசையில் உயர்த்ததும் தென் திசையில் தாழ்த்ததும் முன்னர்க் கூறப்பட்டது. இங்கனமே, கல்வி, கைத் தொழில், வாணிகம், செல்வம், அலுவல், அதிகாரம் முதலிய பிறவற்றிலும் அவ்விரு திசைகளும் (ஆரியமும் திராவிடமும்) முறையே உயர்த்தும் தாழ்ந்தும் போயின வென்றறிந்துகொள்க.

மேற்கு கிழக்கு என்னும் திசைப் பெயர்கள் போன்றே, உத்தரம் (வடக்கு) தக்கணம் (தெற்கு) என்னும் திசைப் பெயர்களும் ஏற்ற விறக்கங்களையுணர்த்துவது பின்னர்க் கூறப்படும்.