பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮௪

ஒப்பியன் மொழி நூல்

தொல்காப்பியர் காலத்தில், தமிழில் வழங்கிய அயன் மொழிச்சொல் வடசொல் ஒன்றே. அதனாலேயே அது தன் பெயரால் வடசொல் எனப்பட்டது. அதன்படி இப்போது தமிழில் வழங்கும் அயன் மொழிச் சொற்களையெல்லாம். ஆங்கிலச் சொல், இந்துஸ்தானிச் சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே கூறல் வேண்டும். திராவிடமொழிச் சொற்கள் மட்டும் திசைச்சொல்லாகவே கூறப்படும்:

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கின வடசொற்களும், அருகிய வழக்கேயன்றிப் பெருகிய வழக்கன்று. அவ்வருசிய வழக்கும் வேண்டாமையாய்த் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டதாகும்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்று தொல்காப்பியர் கூறியது, வடசொல் மேன்மேலுங் கலந்து தமிழ்த் தூய்மையைக் கெடுக்காதவாறு ஒருவாறு தடை செய்ததே யன்றி, இக்காலத்துச் சிலர் எண்ணுவது போல வடசொல்லையும் பிற சொல்லையும் தாராளமாய்ச் சேர்த்துக்கொள்ளுமாத விடை தந்ததன்று.

(8) திராவிடம் என்னுஞ் சொன் மூலம்

பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் ' அம்' ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.

கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள (ம்) —த்ரமிட (ம்) — த்ரவிட (ம்) — த்ராவிட(ம்) என்றும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் எனறு திரிந்ததாகும்.

தமிழம் என்பது தமிள—தனிள—தவிட என்று பிராகிருதத்தில் திரித்த பின்பு, தமிள தவிட என்னு!' வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரித்ததாக, பண்டிதர் நிரையர்சன் (Dr. Crierson) கூறுவர்.[1]எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.

கால் வெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினர்: அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார்.


  1. *Linguistic Survey of India, Vol. IV. p. 298.