பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் இருசார் பார்ப்பனர்

39

தமிழகத்தில் இருசார் பார்ப்பனர்

தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரார் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர்; அவர் அகத்தியர், தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக் கெடுத்தோர். இவருட் பிந்தின சாராரே வரவர மலிந்துவிட்டனர். முந்தின சாரார், பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியாருக்குப் பின், விரல் வைத்தெண்ணுமளவு மிகச் சிலரேயாவர். வடநாட்டினின்றும் பிந்தி வந்த பிராமணர் முந்திவந்தவரை மிகக் கெடுத்துவிட்டனர்.

தமிழையும் தமிழரையும் கெடுத்தோருள் பலர், பாட்டும் நூலும் உரையும் இயற்றியிருத்தலால், தமிழை வளர்த்தார்போலத் தோன்றுவர். ஆனால் ஆராயின், அவர் வருவாய்ப் பொருட்டும், வடசொற்களையும் ஆரியக் கருத்துகளையும் தமிழ் நூல்களிலும் வடநாட்டுப் பார்ப்பனரைத் தமிழ் நாட்டிலும் புகுத்துவதற்கும் பார்ப்பனக் குலத்தை உயர்த்துவதற்குமே அங்ஙனம் செய்தனர் என்பது புலனாகும்.

எ - டு, “அந்தணரின் நல்ல பிறப்பில்லை” என்றார் விளம்பி நாகனார். “அந்தணரில்லிருந்தூ ணின்னாது” என்றார் கபிலர்.[1] “ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே” என்றார் பூதஞ்சேந்தனார். “.....நன்குணர்வின்—நான் மறையாளர் வழிச் செலவும் இம்மூன்றும் மேன்முறையாளர் தொழில்” என்றார் நல்லாதனார்.

“எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார்”, “பார்ப்பார்.... தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூதம் அன்றே கெடும்”, “பார்ப்பார் இடைபோகார்.”

“வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.”

“பார்ப்பார்...... இவர்கட்காற்ற வழிவிலங்கினாரே பிறப்பினுள் போற்றி எனப்படுவார்”, “பசுக்கொடுப்பின் பார்ப்பார் கைக்[2] கொள்ளாரே”


  1. *சில காரணங்களையிட்டு, இவர் பாரியைப் பாடியவரினின்றும் வேறானவராக எண்ணப்படுகிறார்.
  2. 1. பார்ப்பார்கை = பார்ப்பாரின் கையினின்று.