பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர்...தமிழ்மொழிக் கதிகாரிகளாகாமை

73

பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும்.

இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக.

தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க.

பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும்.

பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு

பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர்.

றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ்வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர்.

(பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியாயறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்துக்க-