பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

அதுபோல் நீயும் ஏதாவது வால் உள்ள விலங்குகளைக் கூட்டிக் கொண்டு வந்து, அவை தம் வாலை உனக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால், நான் அந்த வாலை எடுத்து உன் இனத்திற்கு ஒட்டிவைக்கிறேன், போ, ஏதாவது வால் உள்ள உயிர் இனத்தின் தலைவனைக் கூட்டிக் கொண்டுவா!" என்றார் பிரம்மா. ஈ பறந்தோடியது, பிரம்மா அமைதிப் பெருமூச்சு விட்டார்.

போன ஈ திரும்ப வரவே வராது என்று அவருக்குத் தெரியும். அதனால் அமைதியாகத் தம் படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டார்.

ஆனால் பூவுலகுக்கு வந்த ஈ சும்மா இருக்கவில்லை. உலகத்தைச் சுற்றத் தொடங்கியது. காடு மலை ஆறு வயல் கடல் என்று எல்லா இடங்களுக்கும் சென்றது. ஆங்காங்கே உள்ள, வால் உள்ள உயிர்களைப் பார்த்துப் பேசியது.

முதலில் அது ஓர் ஆற்றுக்குச் சென்றது. அங்கே தன் அரசியுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த மீன் அரசனைச் சந்தித்தது.

"மீனே, உன் அழகான வாலை எனக்குத் தருகிறாயா? எனக்கு வால் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கடவுள் உன் ஒப்புதலைக் கேட்டு வரச் சென்னார்" என்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/47&oldid=1165229" இலிருந்து மீள்விக்கப்பட்டது