பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/108

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106 |  ஒரு கவிஞனின் இதயம்

புற்று நோயிற்கிலக்கான ஒரு நாள் நான் கேட்டேன். "ரொம்ப வலிக்கிறதா? என்று. என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்தார். என்ன பார்வை அது? கோபமா? வெறுப்பா? வேதனையா? அனைத்தும் கலந்த ஓர் கலவையா? “ஆம்! வலிக்கிறது. உன் கேள்வியால் ரொம்ப வலிக்கிறது. கவிஞன் என்பவன் காலத்தை கடந்து நிற்பவன. அவனுக்கு வாழ்வும் சாவும், சுகமும், துக்கமும் ஒன்றே. இந்த நோய் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் இதை எதிர்த்துப் போராடுவேன். வெற்றி பெறுவேன் என்றவர், அந்த வலியை - மரண வலியை - ஒரு முக்கல் முனங்கலின்றி - ஏன்? ஊ....ம் என்ற ஒரு பெருமூச்சும் கூட இன்றி அந்த நோயை, மென்று, தின்று, விழுங்கிச் சலனமின்றி யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் அமைதியாக மரணத்தை எதிர்கொண்டதன் மூலமாக ஆம்..! அதை அவர் வெற்றி கொண்டார் என்பதுதானே உண்மை.

இப்படிப்பட்ட உறுதிமிக்க துணிவுமிக்க என் தந்தைக்காக - இன்றைய சமுதாயம் அவரை கண்டு கொள்ளாதபோதும், இலக்கியவாதிகள் அவரின் எழுத்தை புறக்கணித்த போதும், நாளை - ஒரு நூறு வருடத்திற்குப் பின்பேனும் அவை பேசப்படும். உண்மைக் கவிஞனை அவன் எழுத்தை ஒட்டு மொத்தமாகப் புதைத்துவிட இயலாது என்ற நம்பிக்கையோடு, தொடர்ந்து அவனது நூல்களை வெளியிடுவேன். அதிகம் படிக்காத அறிவிலியாக நான் இருந்த போதிலும்கூட அவைகள் காத்திருக்கும் தகுதியறிந்து தழுவும் கரங்களுக்காக...!

- வெ.இரா. நளினி