பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/75

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

73 |  வெள்ளியங்காட்டான் 


இவைகள் வழியில் அவனுக்குக் கனமானவைகளாக இருப்பினும் கூட ஏன்? இவைகள் அவனுடைய அத்யாவசியப் பொருள்கள். அவை அவனுடைய உழைப்பிற்கு உறுதுணைகள்.

நீ பெறும் ஊதியமும் இத்தகையதே. உன் குறிக்கோளை அடைவதில், உன் பிரயாணம் தங்குதடையின்றி இனிது முடிவதில் இன்று நீ ஈட்டும் ஊதியமே உறுதுணையாவது.

என் தோல்விகளிலிருந்து கற்ற பாடம் இது. என் தந்தையின் அவ நம்பிக்கையின், அறியாமையின் விளைவு என் தோல்வி. ஆனால் நீ ஒரு நல்ல அனுபவமுள்ள தந்தையைப் பெற்றிருக்கிறாய். இது ஒரு நல்ல வாய்ப்பு.

என் செல்வமே! எழுது எழுது; மேலும் மேலும் எழுது; எழுதிக்கொண்டேயிரு; கற்றுக் கொண்டே இரு உன் ஒவ்வொரு கணமும் செயலில் கழியட்டும்.

நீ இருப்பது வாடகை வீடா? சொந்த வீடா? என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகப் படவேயில்லை. இது போன்றவை சின்ன விஷயங்கள். உன் மனத்திற்கு எங்கு இருந்தால் எப்படி இருந்தால் செளகர்யமாக இருக்குமோ அப்படி இரு! அது எனக்கும் மகிழ்ச்சி!

கடைசியாக ஒன்று சொல்கிறேன். உழைப்புதான் செல்வம் செல்வம்தான் நம் குறிக்கோளை அடைய உள்ள அரிய சாதனம். அறிவுதான் நமது உண்மையான நண்பன் ஆற்றல்தான் நமது பிதுரார்ஜித மூலதனம்.

உங்களுடைய புது வாழ்வின் தொடக்கத்தில் என் ஆசிகளை விரும்பிக் கேட்ட உனக்கு நான் தரும் புத்திமதிகள் இதுவே. இவைகளே என் ஆசிகள். இவைகளே எல்லாம் வல்ல இயற்கையின் ஆசிகளும் ஆகும்.

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.