பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/79

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

77 |  வெள்ளியங்காட்டான் 

நளினியை நீ உடன் பிறந்தவளாக நினைத்துக்கொள். இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் வரை அவளுக்கு முடியுமானால் கொஞ்சம் பணம் உதவி செய். வாழ்க்கையில் அவளுடைய மனம் மிகவும் புண்பட்டிருக்கிறது. என் அளவில், குடும்பத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களால் நளினியின் தூய இருதயத்தில் வெறுப்பும் சினமும் உண்டாக ஏதுவாயிற்று. அதற்கு ஒரே மருந்து நாம் அவளுக்கு ஓரளவு பணம் உதவுவதேயாம்.

உன் சிரமத்தை நான் உணராமலில்லை. உனக்கு நான் இனி என்றும் பாரமாக இருக்கமாட்டேன். நிச்சயம் தைமாதத்திலிருந்து என் உழைப்பு எனக்குச் சோறுபோடும்.

நான் என்றும் எனக்காக வாழவில்லை. இதுதான் நம் உற்றார், உறவினர் கண்ணில் படும் நான் செய்த தவறு. இனியும் நான் என்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. என் கடைசி மூச்சு வரையிலும் நான் பிறருக்காகவே வாழுவேன்.

நளினி மற்றவர்களை அனுசரித்து நடக்கவோ - நடக்காமலிருக்கவோ - எப்படியாவது இருக்கட்டும். மாமி, நளினியுடனோ, உங்களுடனோ வசிக்கட்டும். அதைப் பற்றிய எந்தவிதமான அபிப்ராயமும் எனக்கு இல்லை. அவைகளெல்லாம் அவர்களது சொந்த காரியங்கள்.

என்னைப் பொருத்தவரை நான் இனி ஒரு தனி மனிதன். நளினி இன்று பணமுடையால் சிரமப்படுகிறாள். அதற்கு நம்மால் ஏதாவது உதவ முடியுமா என்பதுதான் என் கவலை.

இது காறும் உன்னிடத்தில் நான் வாங்கியுள்ள பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிடவே முயலுவேன்.

இனிமேல் நான் உங்கள் எல்லோரிடமும் எதிர்பார்ப்பது அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த உங்களது நல்வாழ்க்கையே. உங்கள் அறிவும் ஆற்றலும் உங்களுக்கு உதவுவதாகுக!

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.