பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

79 |  வெள்ளியங்காட்டான் 

பொருள் அறிந்து வாழ்க்கையில் பயன்படுத்து. மகிழ்ச்சிகரமான வாழ்க்கையின் அடித்தளம் இதுவே. பொறுமை, சகிப்புத்தன்மையில்லாத ஒருவருக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தூரமாகிவிடுகிறது.

இனி நீ எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும், குழந்தைகளின் நலத்தையும் போக்கையும் குறிப்பிடுவாய் என எதிர்பார்க்கிறேன். என் பேரன் பேத்திகளின் மழலை மொழிகள் அருகிலிருந்து கேட்டு அனுபவிக்கும் வாய்ப்பு இனி எனக்கு உண்டாகாது. நான் இனி உதிர்ந்து விட வேண்டிய பழுப்பிலை. ஆயினும் என்ன? என்னில் கிளைத்த என் மக்கள் என் பேரன் பேத்திகளின் நலன்களில் - மகிழ்ச்சியில் ஒருவிதமான பிடிப்பு இருக்கவே செய்கிறது. “கடந்த ஞானியராயினும் கடப்பரோ மக்கள்மேல் காதல்” என்ற நளவெண்பாவின் கருத்து நிதர்சனமாகிறது.

இறுதியாக நான் உனக்குச் சொல்வது இதுதான். குடும்ப கௌரவம் காப்பாற்றப் படவேண்டும். அது போலவே குடும்ப நலனும் மகிழ்ச்சியும் காப்பாற்றப் படவேண்டும்.

அக்காவிடமிருந்தும், மனோகரனிடமிருந்தும் கடிதங்கள் வந்திருந்தன. இந்தக் கடிதங்களே உங்களுடன் என்னை பிணைத்து வைக்கின்றன.

மற்றபடி யாவும் நலம்

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.