பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/92

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90 |  ஒரு கவிஞனின் இதயம்

வருமானம் பற்றி கேட்டிருக்கிறாய் அல்லவா? இது எதற்கு? ஒரு சிறு கோழிப் பண்ணையில் என்ன வருமானம் வந்துவிடும்?

உன்னை நினைக்கும்போது என் மனம் உண்மையிலேயே வருந்துகிறது. உன்னைப்பற்றி நான் என்றும் நீங்காத நம்பிக்கை வைத்திருக்கிறேன். அந்த நம்பிக்கை சென்ற சில மாதங்களிலிருந்து அடியோடு தகர்ந்து விட்டது. கெட்டாலும் வாழ்ந்தாலும் இனி உன் உதவிவேண்டாம். எனக்கு அனுப்பும் பணம் திருப்பி எதாவது ஒரு உருவில் பெருகி உனக்கு திரும்பி வரும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில் உன் உதவியை பெற நான் வெறுக்கிறேன். என் இதயம் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவு ஏதுமில்லை.

வெறும் மனிதனாக இருந்து கொண்டிருக்கிறேன். எப்படியோ சாப்பாடு கிடைக்கிறது. அது எங்கிருந்து கிடைத்தால்தான் என்ன? எனவே நீ இனி பணம் அனுப்பவேண்டாம். எங்கேயோ எப்படியோ நீ மிகவும் நல்லவனாக வாழ்கிறாய் என்றிருந்தால் போதும் வேறு செய்தி இல்லை.

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.