பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"எங்கய்யாவ மாரிமுத்து நாடார் குடுத்த கடன சாக்கா வச்சி கோட்டுக்குள்ள நிறுத்திட்டாரு. நானும், போலீஸ் ஏழ மக்களோட தொணைவன்னு சொல்றாகளேன்னு இங்க வந்து, இந்த அய்யாகிட்டச் சொன்னேன். கோட்டுக்குள்ள அய்யா துடியாய்த் துடிச்சி கதறிக்கிட்டுக் கிடந்தாரு. என்ன வேற கெட்ட வார்த்தையில பேசுனாங்க, அதனால் இந்த அய்யா கிட்ட வந்து சொன்னேன். இந்த அய்யாவும் வந்தாரு. கோட்டுக்குள்ள நிறுத்தினவங்கிட்டயே கலர் குடிச்சிட்டு, பட்ட போட்டார்ன்னு அய்யாவ இழுத்துக்கிட்டு வந்துட்டாரு. நானும் கேக்குறேன். எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும் இவரு மாரிமுத்தோட கலர் குடிச்சதுக்கும் என்ன வித்யாசம்? சொல்லுங்க எசமான்."

ஹெட்கான்ஸ்டபிள் முகத்தில் 'கலர்' மாறியது. பல்லைக் கடித்துக்கொண்டு, ஏதோ சொல்லப் போனார். சப்-இன்ஸ்பெக்டர், தனக்கு வந்த சிரிப்பையும், பேசப்போன ஹெட்கான்ஸ்டபிளையும் ஒரே சமயத்தில் அடக்கினார். உலகம்மையால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"கோட்டுக்குள்ள வச்சாரா இல்லியான்னு பக்கத்துல இருக்கவங்கள ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். இவரு ரகசியமா உண்ம தெரிஞ்சாலும் அத மாத்திச் சொல்லுவார்னு தெரிஞ்சும் சொன்னேன். கேட்டாரான்னு கேளுங்க. ஏழன்னா இளக்காரம். பணக்காரன்னா முப்பத்திரண்டு பல்லும் தார ஜாயுது."

சப் இன்ஸ்பெக்டருக்கும் லேசாகக் கோபம் வந்தது. அவள், தன் 'டிபார்ட்மெண்ட் சபார்டினேட்டை' ஓவராய் பேசுவதுபோல் தோன்றியது. கொஞ்சம் அதட்டிப் பார்த்தார்.

"நீ பேசுறது நல்லாயில்ல. அதிகாரிங்கள அனாவசியமா பேசுற. மரியாத குடுக்காம பேசுற."

"நான் சொல்றது தப்புன்னா ஒங்க காலுல கிடக்கிற பூட்ஸக் கழத்தி அடியுங்க. பட்டுக்கிறேன். ஆனால் நியாயத்துல அடிக்காதிய. சாராயம் குடிச்சதா அய்யாவ கூட்டியாந்தாரே. அவருக்கு யாரு குடுத்திருப்பான்னு விசாரிச்சாரா? காய்ச்சுனவங்களையும் பிடிச்சாரான்னு கேளுங்க."

ஹெட்கான்ஸ்டபிள் சங்கடப்பட்டார். சப்இன்ஸ்பெக்டர் உள்ளூரச் சந்தோஷப்பட்டாலும்,. அவளைக் கோபமாகப் பார்ப்பதுபோல் பார்த்தார். அவர் வேலையில் சேர்ந்து ஒரு மாதந்தான் ஆகிறது. ஆகையால் இன்னும் கெட்டுப் போகவில்லை.