பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவை மீட்டு...

95



உலகம்மைக்கு இன்னும் ஆவேசம் நின்றபாடில்லை. லாக்கப்பிற்குள் இருந்த மாயாண்டிகூட "போதுமுழா, போதுமுழா என்றார். அவளுக்குப் போதாது போல் தோன்றியது.

"ஒங்களப் பாத்தா நல்லவங்க மாதிரி தோணுது. அதனாலதான் சொல்லுறேன். தைரியமிருந்தா மாரிமுத்து நாடார இங்கக் கூட்டியாந்து விசாரிங்க பாக்கலாம், ஏழங்கதானா ஒங்க காக்கிச்சட்டைக்குப் பயப்படணும்?"

உலகம்மை நிறுத்திக் கொண்டாள், சப்-இன்ஸ்பெக்டர், மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிவிட்டுக் கொண்டு, சிறிது யோசித்தார். பிறகு உத்தரவிட்டார்:

"ஹெட்கான்ஸ்டபின், உடனே மாரிமுத்து நாடாரக் கூட்டியாங்க."

ஹெட்கான்ஸ்டபிள் தயங்கினார். பிறகு, "நேத்து மந்திரிக்கு மாலை போட்டாருங்க" என்று அவர் காதோடு காதாகச் சொன்னார்.

சப் இன்ஸ்பெக்டர் இப்போது கத்தினார்.

"இலய எடுக்கச் சொன்னா எத்தன பேரு சாப்பிட்டான்னு எண்ணுறீர். குயிக்கா போயி கொண்டு வாரும். எனக்கு எல்லாந்தெரியும். லாக்கப்புல இருக்கவன் மேடைக்குப் போறதும் மேடையிலே இருக்கவன் லாக்கப்புக்கு வரதும் சகஜம். நமக்கு சம்பந்தமில்லாதது. 'குயிக்'."

ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக 'சல்யூட்' அடித்துக் கொண்டே புறப்பட்டார். போனவரை திரும்பக் கூப்பிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

"ஒம்மத்தாய்யா, சைக்கிள்ல போகாண்டாம். ஜீப்ப எடுத்துக்கிட்டுப் போம். ஆசாமி இல்லன்னு சொல்லிட்டு வரப்படாது. அந்த ஆளு எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் தூக்கிக்கிட்டு வாரும். பணக்காரன ஏழைங்க முற்றுகையிடுற 'கெரோவையே' சட்டவிரோதமுன்னு சொல்லும்போது. ஏழையை முற்றுகையிடுற பணக்காரனும் சட்ட விரோதிதான். விஷயம் சீரியஸ், நீரே அவனுக்குச் சொல்லிக் கொடுக்காம, மாமூலா வர்ரது மாதுரி வராமல் ஆளோடு வரணும். அண்டர்ஸ்டாண்ட்? புரிகிறதா? போங்க, குயிக். டபுலப்."

சப் இன்ஸ்பெக்டர் மாமூலான அதிகாரியல்ல. ஆகையால் 'மாமூலா' என்கிற வார்த்தைக்கு மாமூலுக்கு மேலான அழுத்தத்தைக் கொடுத்தார்.