பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"நீங்க என்ன சொன்னாலும் சரிதாங்க."

"ஆல்ரைட். ஒலகம்மா, நீயும் வாங்குன கடன குடுத்திடணும். மொத்தமா முடியாட்டாலும் கொஞ்சங்கொஞ்சமாக் குடுத்திடலாம்."

"சரிங்க எசமான்."

"ஆல் ரைட். மாயாண்டிய விடுய்யா. யோவ் இனிமே குடிப்பியா?"

"சத்தியமா மாட்டேன்."

"சரி போங்க."

இதற்குள், மாரிமுத்து நாடார் 'அரெஸ்ட்' செய்யப்பட்டார் என்ற செய்தி ஊரெங்கும் பரவ, வெள்ளைச்சாமி ராமசாமியோடு ஒரு பெரிய பட்டாளமே அங்கு வந்து விட்டது. பலவேச நாடாரும், 'மச்சினனைப் பார்க்க வந்து விட்டார். சப் இன்ஸ்பெக்டர் கூட, என்னமோ ஏதோ என்று கொஞ்சம் பயந்து போனார். மாரிமுத்து நாடாருக்கு அருகே, அய்யாவுடன் போய்க் கொண்டிருந்த உலகம்மையை, சைகை செய்து வரும்படி சொன்னார். அவள் அய்யாவையும் கூட்டிக்கொண்டு வந்தாள்.

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன மாரிமுத்து நாடார், கூட்டத்தைப் பார்த்ததும், தலை நிமிர்ந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் கொஞ்சம் எகிறியிருக்கலாம் என்று கூட நினைத்தார். மச்சான் பலவேசத்தைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தார். அவர் "ஒம்ம சப் இன்ஸ்பெக்டர் லத்திக் கம்ப வச்சி அடிச்சானாமே. இத விடக்கூடாது. ஹைகோர்ட் வரைக்காவது போயி ரெண்டுல ஒண்ண பாத்துடணும்" என்றார். 'அடிபடல' என்று சொன்னால்கூட, யாரும் நம்பத் தயாராக இல்லை. மாரிமுத்து நாடாரைச் சூழ்ந்து கொண்டு, போலீஸ் ஸ்டேஷனையே எரித்து விடுவதுபோல், பார்த்த கூட்டம், ஒரு கான்ஸ்டபிள் துடைப்பதற்காக எடுத்த துப்பாக்கிக்குத் தப்பர்த்தம் கொடுத்துக் கொண்டு, வேகமாக ஊரைப்பார்த்து நடந்தது.

கால் மணி நேரம் ஆனதும், உலகம்மையைப் பார்த்து "சரி நீயும் போவலாம்" என்றார் சப் இன்ஸ்பெக்டர்.

"ஒங்க உதவிய இந்தக் கட்டையில் உயிரு இருக்கது வரைக்கும் மறக்க மாட்டேன் எசமான். அஞ்சு பத்து தரக்கூடப் பணமில்ல. தெய்வம் மாதிரி நீங்க ஒங்கள மாதிரி லட்சத்துல ஒரு அதிகாரி இருக்கதனால்தான் ஜனங்களும் கட்டுப்பாடா இருக்காங்க.!"