பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊருக்கு அவலாகி...

101



"அப்ப நாமளும் அவளப் பிடிச்சி இழுத்து பொட்டப்பயலுவ இல்லங்கறத நிரூபிக்க வேண்டியதுதான்."

"செறுக்கி மவா, காலக்கைய ஓடிக்க ஆளுல்லாமப் போனதால காலத்தெள்ளிக்கிட்டு நடக்கா. உண்மையிலே நம்மைப் பொட்டப் பயலாத்தான் ஆக்கிட்டா."

டீ குடித்துவிட்டு, பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணசாமியால் பொறுக்க முடியவில்லை. போலீஸ்காரர்கள், மாயாண்டியை இழுத்துக்கொண்டு போன தினத்தில், அவர் வெளியூர் சந்தையில் கருவாடு விற்றுக் கொண்டிருந்தவர். ஆகையால் உலகம்மை சொன்ன 'பொட்டை லிஸ்டில்' தான் இல்லை என்பது அவரது அனுமானம். மாரிமுத்து நாடார், அவருக்குப் போகிற 'வாய்க்காலு' தண்ணியைத் தடுக்க முடியாது. எனென்றால் அவருக்கு நிலமே கிடையாது. அதோடு மாரிமுத்து நாடாரிடம் கடன் படாதவர். உலகம்மைக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தமுங்கூட. நாராயணசாமி எதிர்த்துப் பேசினார்:

"என்னய்யா பேசுறிய? பேச்சா இது அவரு ஒரு வயசான மனுஷனைக் கோட்டுக்குள்ள நிறுத்தியிருக்காரு? வந்த போலீஸ் அடச்சவர விட்டுப்புட்டு அடபட்டவரக் கூட்டிக்கிட்டுப் போவுது. ஆயிரம் ஜனத்துல ஒரு ஜனங்கூட ஏன்னு கேக்கல. அவா சொன்னதுல என்ன தப்பு? சும்மா ஒரு பொண்ணப்பத்திக் கண்டபடி பேசாதிக. நமக்கும் அக்கா தங்கச்சி இருக்கு."

தட்டாசாரி பஞ்சாட்சரம் குறுக்குக் கேள்வி கேட்டார்:

"அன்னிக்கு நீரு கேக்க வேண்டியதுதான நாடாரே"

"நான் இருந்திருந்தா கேட்டிருப்பேன். அந்த இடத்துல உபிரக்கூட விட்டுருப்பேன். இல்லாதவன் பொண்ணுன்னா எப்படின்னாலும் பேசலாமா?"

கூட்டத்தில் ஒரு நிசப்தம். சிலர் உலகம்மையிடம் பயந்தார்கள். சப் இன்ஸ்பெக்டருக்கு வேண்டிய' அவளிடம், கொஞ்சம் மரியாதைகூட ஏற்பட்டது. 'பய மவா ஒண்ணு கிடக்க ஒண்ணா இன்ஸ்பெக்டர் கிட்ட வத்தி வச்சிப்புட்டான்னா நம்ம பொழப்பு என்னாவுறது. அதோடு நாளக்கி மாரிமுத்து நம்மையும் இப்டிப் பண்ண மாட்டாங்றது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட சமயத்துல உலகம்மய பிடிச்சி இன்ஸ்பெக்டாப் பிடிக்கலாம்.'