பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஒரு கோட்டுக்கு வெளியே ...


பாதிக்கப்பட்ட அவர்களுக்கு ‘நிவாரணம்’ அளிப்பதாக கணக்குப்பிள்ளை வாக்களித்திருக்கிறாராம். அவருக்கு இதற்காக ஓசியில் நாற்றும், தலா ஒரு மூட்டை நெல்லும் கொடுத்து, ‘பதில் நிவாரணம்’ அளிப்பதாக ‘பாதிக்கப்பட்டவர்கள்’ வாக்களித்திருக்கிறார்களாம். எவர், எதை முதலில் கொடுப்பது என்ற பிரச்சினையில், விவகாரம் தொங்குவதாகக் கணக்குப்பிள்ளைக்கு வேண்டாத கிராம முன்சீப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சில ஆசாமிகள் குளக்கரையையே ஒருகை பார்த்தவர்கள். குளத்தை ஒட்டி நிலம் வைத்திருந்த அவர்கள், குளக்கரையில் பாதியைக் குடைந்து நிலமெடுத்தார்கள். ஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த குளக்கரை மேலும் ஒல்லியாகி, நீர் கசிந்து கொண்டிருக்கிறது. நீரழுத்தத்தால், தங்கள் வயல் பக்கமுள்ள கரை உடைந்து வெள்ளம் புகுந்துவிட்டால், வெள்ளாமை வீணாகிவிடுமே என்று இப்போதுதான் ஞானோதயம் வந்தவர்கள் போலவும், அதே சமயம், வயலான கரைப் பகுதியை ‘நெம்ப’ மனமில்லா மாயையிலும் சிக்கித் தவிக்கிறார்கள். ‘கர ஒடயாதுடா... கவலப்படாத’ என்று அவர்களுக்கு சில சகுனி மாமாக்கள் ஆலோசனை சொன்னார்கள். கரை உடையாவிட்டால் “பாத்தியா... நான் சொன்னது மாதிரி உடையல” என்று சொல்லலாம். அப்படியே உடைந்தாலும், ஆலோசனைவாதிகளின் குடி ஒன்றும் முழுகி விடாது.

குளத்தை ‘ஒரு கை பார்த்தவர்கள்’, குளக்கரையையே ‘இரு கை பார்த்தவர்களோடு’ இன்னொரு ரக ஆசாமிகளும், கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வரப்பு வெட்டித் திலகங்கள், மடைக்கால்வாயை வெட்டி, தத்தம் வயல்களுக்கு ‘குட்டி வயல்’ சேர்த்தவர்கள். இப்போது மடைநீர் வாய்க்கால் இல்லாத வயலுக்குள் பாய்ந்து, கிட்டத்தட்ட குட்டிக்குளம் மாதிரி பெருகி விட்டது. வயலுக்குக் குட்டி சேர்த்தவர்கள். குளமும் குட்டி சேர்ப்பதைப் பார்த்து, என்ன பண்ணலாம் என்று தத்தம் தலைகளைக் குட்டிக் கொண்டார்கள்.

லேசாக உடைந்த முட்டையிலிருந்து, வெள்ளைக்கரு கசிவதுபோல், குளத்தின் ‘மடை’ வழியாக நீர் கசிந்து கொண்டிருந்தது. இன்னும் நாலு ‘பிடி’ பெருகிய பிறகுதான், மதகைத் திறப்பது என்று ஊர்க்காரர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குளத்து நீரை நம்பி, அதற்குக் கிழக்கேயுள்ள கொண்டலப்பேரி குளம் ‘வயிறு காய்ந்து’ கிடந்தது. கொண்டலப்பேரிக்காரர்கள், மதகைத் திறந்து விடும்படி, குட்டாம்பட்டிக்காரர்களைக் கெஞ்சிப் பார்த்தார்கள்.