பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஒரு கோட்டுக்கு வெளியே ...



வேண்டும் என்று நினைத்தவர் அவர். இதுக்காக, 'ஊர்ல சண்டகூட இல்லியேன்னு' வருத்தப்படுபவர், தீர்ப்பு வழங்கினார்.

"யாருடா கூட்டத்துல பேசுறது சப்ளா சளபுளான்னு பேசாதிங்க! மாயாண்டி, ஒன் பொண்ணு கேக்கக்கூடாத கேள்வியைக் கேட்டுட்டா, நீ குத்தத்த ஒப்புக்கொண்டதுனால அம்பது ரூபாய் அபராதம் போடுறேன். என்ன. எல்லாத்துக்கும் சம்மதந்தானா?"

கூட்டம் நிசப்தத்தின் மூலம், அங்கேரித்தது. மாயாண்டி கெஞ்சினார்:

"குருவித்தலையில் பனங்காய வச்சா எப்டி? குறையுங்க சாமி."

"சரி முப்பது ரூவா. இனிமே பேசப்படாது. பத்து நாளையில கட்டிடணும்."

மாயாண்டி பேசவில்லை. ஏதோ பேசப்போன உலகம்மை, கூட்டத்தில் ஒருவர்கூட, தனக்காக ஒரு வார்த்தையும் பேசாததால், பேசிப் பிரயோஜனமில்லை என்று நினைத்து நின்று கொண்டிருந்தவள், கொஞ்சம் தள்ளிப்போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டாள்.

ஊர்க்காரர்கள் பேசாமல் இருந்ததற்கு ஒரே காரணம், பயம்! பயம்! நொண்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கை மண்டிப் போகாமல் இருக்கவேண்டும் என்கிற சுயநலப் பயம் ஊர்க்கொடுமைகளை, 'கான்ஷியஸாக' உணராத அறியாமைப் பயம்! அவற்றை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த இயலாமைப் பயம்! பூன எலியப் பிடிக்கதப்பத்தி வருத்தப்படுறோமா? அப்டி வருத்தப்பட்டா பயித்தியந்தான் பிடிக்கும்!' அந்த வகையில் அமைந்த 'எவனும் எப்டியும் போறான்' என்னும் பயம்!

இந்தியாவில், பொருளாதார சக்தி, ஒரு சில தொழிலதிபர்களுடன் முடங்கிக் கிடப்பதாக, பொருளியல் நிபுணர்கள் முதல் பொடிக்கடை முனுசாமி வரை பேசுகிறார்கள். இதேபோல் அரசியல் அதிகாரமும் ஒரு சிலரிடம் முடங்கியதாக 'இன்டலெச்சுவல்ஸ்' அறிக்கை விடுகிறார்கள். நாட்டில் முடங்கியிருக்கும் 'கான்ஸென்டிரேஷன் ஆப் பவரைப்' பற்றிப்பேசும் இவர்களுக்கு, பாரத முதுகெலும்பான பெரும்பாலான கிராமங்களில், எல்லா 'பவர்களும்' ஒருசில உறவுக்காரர்களிடமே முடங்கியிருப்பது தெரியாது. இதனால் ஜனங்கள் வாயிருந்தும் ஊமையைப்போல இருப்பதும் புரியாது.