பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ச்சபை முன்னால்...

111



'குட்டாம்பட்டியை எடுத்துக்கொண்டால், கிராம முன்சீப், மாரி முத்து நாடாரின் பெரியய்யா மகன். பலவேச நாடாருக்கு 'அய்யாகூடப் பொறந்த' அத்தை மவன். 'ஒலகம்மைக்காகப் பேசிட்டு அவருகிட்ட போனா எந்த சர்டிபிக்கட்டாவது குடுப்பாரா? நிலவரிய நிறுத்துனா பானசட்டிய வெளில நிறுத்த மாட்டாரா? பஞ்சாயத்துத் தலைவர், மாரிமுத்து நாடாரோட சின்னையா மவன். அவருகிட்ட 'யூனியன்' லோனுக்குப் போவாண்டாமா? அப்புறம் பள்ளிக்கூடத்து மானேஜர் பலவேச நாடாரோட அண்ணன் மவன், உலகம்மகிட்ட போனா பையங்க அவரு பள்ளிக்கூடத்துல போவ முடியுமா? தென்காசில கம்பெனியில வேல இருக்குன்னு வச்சுக்குவோம். ரெண்டாப்பா' 'எட்டாப்பா' காட்டணும். மானேஜர் அட்டி நிறையப் பேருக்குக் குடுத்திருக்கார். நம்ம பையனுக்கும் குடுக்காண்டாமா? போவட்டும், போஸ்ட் மாஸ்டர் இருக்காரே, அவுரு மாரிமுத்துக்குக் கொளுந்தியா மவன், வேண்டாதவங்களுக்கு வாற லட்டர கிழிச்சிப்போடுறதுல மன்னன்! கிழிச்சான்னு' அவர நெசமாவே சொல்லலாம். சண்ட இல்லாதபோதே லெட்டர கிழிக்கவன் உலகம்மைக்கு ஒரு தடவ ஒத்துப்பேசினா பத்து லட்டரக் கிழிப்பான். கணக்குப்பிள்ள, மாரிமுத்து நாடாரும் பலவேச நாடாரும் எடுக்கும் கைப்பிள்ள. இவங்க நம்ம கிட்ட பேசாம இருக்காங்கன்னு தெரிஞ்சா அவன் பேசாம இருக்க மாட்டான் திட்டுவான்!. சொத்துல வில்லங்கத்தக் கிளப்புவான். கணக்கன பகைச்சுட்டா காணி போயிடுமே. இன்னும் ஒண்ணே ஒண்ணு. இந்தக் கூட்டுறவு சங்கம் இருக்கே அதுக்குத் தலைவரு மாரிமுத்து நாடாரு. ஒலகம்மா எதுல இருக்கா? எப்டி இருக்கா?'

மாயாண்டி, தலைதப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று நினைத்தவர் போல், கூட்டத்தைவிட்டு நடந்தார். மகள் எங்கே இருக்கிறாள் என்று பார்க்கவில்லை. அவ்வளவு கோபம். உலகம்மையும் எழுந்து, அவர் பின்னால் போனாள். அய்யா, குப்புறப்படுத்துக் கும்பிட்டது அப்பளுக்கு அடியோடு பிடிக்கவில்லை. கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள்; அதைத் தவிர வேற வழியில்லை. அவள் கவனமெல்லாம் அபராதத்தை எப்படி அடைப்பது என்பதுதான். அன்றாடக்கூலி வயிற்றுக்கே சரியாய் இருந்தது. அபராதம் கட்ட வேண்டிய ஊரார்க்கு அவள் எப்டி அபராதம் கட்டுறது? நிமிர்ந்த பனையில் நேராக ஏறிய அய்யா இப்போ குறுகிய மனுஷங்க முன்னால அடியற்ற பனைபோல் விழ வேண்டியது வந்துட்டு. நடக்கட்டும், நடக்கட்டும்.