பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒடுங்கி நின்று...

113



படுக்கும் போது. உடனே சரமாரியாகக் கற்கள் விழும். முதலில் கூரையில் மட்டும் விழுந்த கற்கள், போகப் போகச் சுவர்களிலும், வாசல்பக்கமும் விழுந்தன. 'ஊராங்கிட்ட பிச்சக்காரி மாதுரி சொல்லாண்டாம்' என்று தீர்மானித்தாள். சொல்லப்போன அய்யாவையும் அடக்கிவிட்டாள்.

வீட்டுக்குள் இப்படி என்றால், வெளியேயும் அப்படித்தான். அவள் சட்டாம்பட்டி வயக்காட்டில்தான் வேலை பார்த்து வந்தாள். அவள் போகும்போதும், வரும்போதும், மாரிமுத்து நாடாரின் 'கான்ஷியன்ஸ் கீப்பர்' பீடி ஏஜெண்ட் ராமசாமியும், பிராந்தன் வெள்ளைச்சாமியும் ஆபாசமாகச் சினிமாப் பாட்டுக்களைப் பாடத்துவங்கினார்கள். ஆபாசமில்லாத பாடல்களை 'எடிட்' செய்தும் பாடினார்கள்.

"மெதுவா மெதுவாத் தொடலாமா - உன்
மேனியிலே கை படலாமா" என்று ராமசாமியும்,
"மெதுவா மெதுவா விழலாமா - உன்

மேலே மேலே விழலாமா"

என்று வெள்ளைச்சாமியும், பாடும் கவிஞர்களாக மாறினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் உலகம்மை போவதைக் கண்டு, ஒரு நாள், "இன்னிக்கு அவா எத்தன பேருகூடல படுத்திருப்பா" என்று ராமசாமியும், அதற்கு வெள்ளைச்சாமி "பத்துப் பேருட்ட போயிருப்பா. பைத்தஞ்சு அம்பது ரூவா" என்றும் லாவணி போட்டார்கள்.

உலகம்மை பதிலுக்கு ஜாடையாகப் பேசலாமா என்று பார்த்தாள். காறித்துப்பலாமா என்று நினைத்தாள். பிறகு "சந்திரனப் பாத்து நாயி குலைச்சுட்டுப் போவட்டுமே" என்று நினைத்துக்கொண்டு, பேசாமல் போவாள்.

அய்யாவிடம்கூட பலநாள் சொல்லவில்லை . இறுதியில் அவரிடம் சொல்லிவிட்டாள். "காறித் துப்பட்டுமா?" என்று யோசனை கேட்டாள். அவரோ “கூடாது. நாம சொல்றதுதான் கடைசில நிக்கும். ஏழ சொல் இந்த மாதிரி விஷயத்தில் தான் அம்பலமேறும். குத்தம் எப்பவும் ஒரு பக்கமாகவே இருக்கணும். நாமளும் குத்தம் பண்ணக் கூடாது" என்று சொல்லிவிட்டார்.

விஷயம் அத்தோடு நிற்கவில்லை.

ஒருநாள் பலவேச நாடார், அவள் வீட்டுப்பக்கமாக நின்றுகொண்டு "மாயாண்டி, நெலம் எனக்கு வேணும். வீடு கட்டப்போறேன். பதினைஞ்சு நாளையில நெலத்த தராட்டா நானே எடுத்துக்கிடுவேன்"