பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ஒரு கோட்டுக்கு வெளியே ...



முறையிட்டாள். அவரோ "அவனவன் தாசில்தார பாக்கதுக்கும் கலெக்டர பாக்கதுக்கும் நேரமில்லாம கிடக்கான். நீ அந்த அசிங்கத்தப் பாக்கச் சொல்றியாக்கும்?" என்று சீறினார். அவள் கிராம முன்ஸிப்பைப் பார்த்தாள். வீட்டு வாசலில் 'பழி' கிடந்தாள். தலையாரி, அவர் சார்பில் வந்து மிரட்டினான். "ஒனக்கு வேற வேல கெடயாதா? அய்யா என்ன பண்ணுவாரு?"

உலகம்மை, மாரிமுத்து நாடாரின் சின்னையா மவனான பஞ்சாயத்துத் தலைவரையும் விட்டு வைக்கவில்லை. அவரோ பட்டுக் கொள்ளவில்லை. அதோடு அவர் 'லெவலில் பேசக்கூடிய விவகாரமாக அதுபடவில்லை . உலகம்மை, கிராம சேவக்கைத் தேடிப் பார்த்தாள். ஒரு மாதத்திற்கு ஒரு தடவை வரும் அவரும், அவள் கண்களுக்கு அகப்படவில்லை .

'என்ன பண்ணலாம்?' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பஞ்சாயத்து அலுவலகம் முன்னால், ஜீப் வந்து நின்றது. பஞ்சாயத்து யூனியன் கமிஷனரை அவளுக்குத் தெரியும். குட்டாம்பட்டியில் நடந்த ஒரு விழாவில் "சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசியதைக் கேட்டிருக்கிறாள். அன்றைக்கும் ‘என்வரன்மென்ட் வீக்கை' எங்கே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பதற்காக, பஞ்சாயத்துத் தலைவரைப் பார்க்க வந்தார். உலகம்மை, நேராக அவரிடம் போனாள்.

"கும்பிடுறேன் ஸார். என் வீட்டுக்கு வடக்க இருக்க ஒரே பாதையிலயும் வேணுமுன்னு அக்கிரமமா அசிங்கமாக்குறாங்க. ஒரே நாத்தம். யாருகிட்டல்லாம் சொல்லணுமோ அவங்ககிட்டெல்லாம் சொல்லியாச்சு. ஒண்ணும் நடக்கல. அய்யாதான் எதாவது செய்யணும்."

பெரிய ஆபீசரிடம், இந்தச் சின்ன விஷயத்தைச் சொன்னதற்காக, சுற்றி இருந்த கிராம சேவக், கணக்கப்பிள்ளை முதலிய பிரமுகர்கள் சிரித்தார்கள். அவளைப் பைத்தியம் மாதிரியும் பார்த்தார்கள்.

உலகம்மை இப்படிப் பேசுவாள் என்று பஞ்சாயத்துத் தலைவர் எதிர்பார்க்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டார். கமிஷனரும், அசந்து போனார். 'கண்டுக்காமலும் இருக்க முடியாது. கலெக்டர் தப்பித்தவறி வந்தா அவருகிட்டேயும் சொல்லுவாள். அந்த மனுஷனும் இத பெரிய விஷயம் மாதிரி கேப்பான். அப்புறம் இதுக்குன்னு ஒருபைல் போடணும். ஆகையால் ஆணையாளரான கமிஷனர் சிந்திக்காமலே வேகமாகப் பேசினார்.