பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ப்பகை மேலிட...

123


 பாத்தா என்ன அர்த்தம்? எண்ணக்குடம் போட்டவனையும் தண்ணிக்குடம் போட்டவனையும் ஒண்ணாச் சேத்தா எப்டி?'

"சப நியாயம் பேசணும். என் விஷயத்த மொதல்ல எடுக்கணும்."

"நீ சபைக்கு உபதேசம் பண்றியா? அனாவசியமாப் பேசப்படாது. நீ அபராதம் கட்டல. போவட்டும். ஒன்னால கட்ட முடியுமா, முடியாதா? ரெண்டுவ ஒண்ண ஒரே வார்த்தயில சொல்லு."

உலகம்மை சிறிது யோசித்தாள். ஒன்றும் புரியாமல் மாயாண்டி அவள் கையைப் பிடித்துக்கொண்டு நின்றார். அவருக்கும் ஊர்க்காரர்கள் போக்கைப் பார்த்து அலுத்து விட்டது. உலகம்மை யோசிப்பதைப் பார்த்ததும் அவள் 'கட்டிடுறேன்' என்று எங்கே சொல்லிவிடப் போகிறாளோ என்று பயந்து, கணக்கப்பிள்ளை தற்செயலாகச் சொல்வது போல் சொன்னார்:

"நீரு ஒண்ணு. அவா எங்கயா கட்டுவா? நாமெதான் அபராதம் குடுக்கணும்பா. ஒரு சபை போட்ட அபராதத்த விட அவளுக்கு யாரோ போறவழியில எவனோ ரெண்டுக்கு இருக்கானாம். அதுதான் முக்கியயாம். சப போட்ட அபராதத்தையும் எவனோ ஒரு பய 'வெளிக்கி' இருந்ததையும் ஜோடியா நினைக்கிறாள். அந்த அளவுக்குச் சபையக் கேவலமா நினைச்சிட்டா! நீங்க ஒண்ணு வேல இல்லாம."

கணக்கப்பிள்ளையும், அந்தப் பிள்ளையைப் பிடித்து வைத்திருந்த மாரிமுத்து பலவேசம் கோஷ்டியும் எதிர்பார்த்தது போலவே, உலகம்மை சீறினாள். கணக்கப்பிள்ளை பொதுவான மனுஷன். அவருக்குக் 'கவுல்' கற்பிக்க முடியாது. அதோடு அந்தப் பிள்ளையை நிலம் வச்சிருக்கும் எவனும் கீரிப்பிள்ளையாய் நினைக்கமுடியாது: கீறிப்புடுவார். அவர்களுக்குச் சந்தோஷம். உலகம்மை கணக்கன் போட்ட கணக்கில் ஜெயித்து விவகாரக் கணக்கில் தோற்றுக்கொண்டிருந்தாள். இது புரியாமல் உலகம்மை 'நாலு ஊருக்குக்' கேட்கும்படியாகவே கத்தினாள்: "என்ன கணக்கப்பிள்ளய்யா, நீரும் அவங்ககூட சேர்ந்துக்கிட்டு ஆடுறீரு. மூணு பக்கமும் அடச்சி நாலாவது பக்கம் நாத்தம் வரும்படியாப் பண்ணியிருக்காங்க. இது ஒமக்கு இளக்காரமா இருக்கா? ஒம்ம வீட்ல யாரும் இப்டிச் செய்தா தெரியும். ஒமக்கென்ன அரண்மன மாதிரி வீடு. என் குடிசய நெனச்சிப் பேசாம, அரண்மனய நெனச்சிப் பேசறீரு."

இந்தச் சமயத்தில் கணக்கப்பிள்ளை , "நமக்கு இந்தக் கத வேண்டாய்யா. பொது மனுஷன்னு பேசினா என்ன பேச்சுப் பேசிட்டா?