பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

ஒரு கோட்டுக்கு வெளியே ...



இன்னும் போனா என்னவெல்லாமோ பேசுவா! இந்த மாதிரி என் அம்பது வயசுல யார்கிட்டயும் பேச்சு வாங்கல. இது ஊராய்யா? ஒரு பொம்புளய அடக்க முடியாத ஊரு ஊராய்யா? நமக்கு ஒங்க வாடையே வேண்டாம். நான் வாரன். ஆள விடுங்க” என்று சொல்லிக்கொண்டு வெளியேறினார்.

'வாக்கவுட்' செய்த கணக்கப்பிள்ளையை, சமாதானப் படுத்துவதுபோல் மாரிமுத்து - புலவேச நாடார் கோஷ்டி அவர் பின்னால் போனது. அவரோ அவர்களை உதறிக்கொண்டு போனார்.

அய்யாவு முகத்தில் இப்போது கடுகடுப்பு. கூட்டத்தினரும் உலகம்மையைக் கோபத்தோடு பார்த்தார்கள். அதைப் பிரதிபலிப்பது போல் அவர் பேசினார்:

"பொது மனுஷன் கணக்கப்பிள்ளயயும் கேக்காத கேள்வி கேட்டு விரட்டிட்ட. ஒன்ன இப்படியே விட்டு வைக்கது தப்பு. முன்னால் போட்ட அபராதம் முப்பது. ராமசாமியோட அக்காள இழுத்ததுக்கு இருபது, கணக்கப்பிள்ளய விரட்டுன்துக்கு முப்பது. ஆக. முன்ன முப்பது. பின்ன அம்பது, மொத்தம் எம்பது ரூபாய் அபராதங் கட்டணும்."

உலகம்மைக்கு இப்போது சொல்லமுடியாத தைரியம். தப்பிக்க வழியில்லாமல் மூலையோடு மூலையாக முடக்கப்பட்டு மரணத்தை அறிந்துகொண்ட ஒரு எலியின் தைரியம் அது.

"இவ்வளவுதானா, இன்னும் போடப்போறீரா?"

அய்யாவு. இப்போது எழுந்து நின்று கொண்டு பேசினார்:

"என்ன... கிண்டலா பண்ற? நாங்க ஒனக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சி இல்லாட்டா ஊர்க்காரங்கள பொட்டப் பயலுவன்னு கேட்ப? ஒன் கண்ணுக்கு இவங்கெல்லாம் பொட்டப் பயலுவ, அப்படித்தானே? ஒனக்குப் பிடிக்காட்டா மாரிமுத்தச் சொல்லு, பலவேசத்தச் சொல்லு, ஒன்பாடு அவங்கபாடு. ஒட்டு மொத்தமா இவங்க எல்லாத்தையும் நீ பொட்டப்பயலுவன்னு சொல்லணும். அதுக்குப் போட்ட அபராதத்தையும் கட்டமாட்ட பொட்டப் பயலுவளாம் பொட்டப் பயலுவ."

"கணக்கப்பிள்ளயும் கொஞ்சம் ஓவராத்தான் பேசுனாரு. ஒலகம்மையும் அவர அப்டிப் பேசிருக்காண்டாம். இருந்தாலும் கோபத்துல பேசுவது பெரிசில்ல" என்று நினைத்துக்கொண்டு, அதை எந்தச் சமயத்தில் எப்படிச் சபையில் வைக்கலாம் என்றும், 'எவரும்