பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஒரு கோட்டுக்கு வெளியே ...


அய்யாவுத் தாத்தா, ‘ஏ பரதேசிப் பய மவன்களா, கீழே இறங்கி, ஒப்பமாருக்குப் போயி ஒத்தாசை பண்ணுங்கல’ என்று கத்தினார்.

அந்த வயல் காட்டில் பதினெட்டாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் ஒன்றாக இயங்கி வந்தன. மாரிமுத்து நாடார் வயலில் டிராக்டர் உழுதது. இலைதழைக்குப் பதிலாக ‘சீம’ உரம் போடப்பட்டிருந்தது. கிணற்றில், கமலைக் கிடங்கிற்குப் பதிலாக, ஒரு சின்ன காரைக் கட்டிடம்; கிழட்டு மாடுகளுக்குப் பதிலாக ‘பம்ப் ஸெட்’.

‘குளத்தடி’ நிலம் அவருடையது. சுமார் ‘ஏழு கோட்டை’ விதைப்பாடு இருக்கலாம். போதாக் குறைக்கு வேறு பகுதிகளில் சில வயல்களை ‘ஒத்திக்கு’ வாங்கியிருக்கிறார். ஒத்தி வைத்தவர்களில் பெரும்பாலோர் உருப்படாதவர்கள். ‘கெரயத்துக்கு எடுத்துக்கிடும்’ என்று முன்வருபவர்களை “ஏண்டா கிரயம் கிரயமுன்னு கிறுக்குத்தனம் பண்றது? ஒன்னோட பூர்வீக சொத்த விக்கலாமா? பேசாம ஒத்தி வையி. எப்பமுடியுதோ அப்பமூட்டிக்க” என்பார். இவரின் கருணை வெள்ளத்தால் திக்குமுக்காடும் சில்லறை வியாபாரிகள், அவர் சொன்ன படியே ஒத்தி வைத்துவிட்டு, ஒரேயடியாய் உருப்படாமல் போய் விடுவார்கள். அப்படி அவர்கள் போவதைப் பார்க்கத் துடிப்பவர்போல், மாரிமுத்துநாடாரும் “இந்தா காக்கிலோ கறி, காசு வேண்டாம். ஒன் கணக்கிலே எழுதிக்கிறேன். இந்தா ஒனக்கு ஒரு வேட்டி வாங்கியாந்தேன், பணம் வேண்டாம், கணக்கு வச்சிட்டேன்” என்று சொல்லியே ஒத்திப் பணத்தை உப்புக்கும் புளிக்குமாகக் கொடுத்து உப்பிப் போனவர்.

அவர் வயல்களில் ஒன்றே ஒன்றைத் தவிர, எல்லா வயல்களிலும் ‘நடவு’ வேலை முடிந்து விட்டது. ஒரே ஒரு வயலில் மட்டும் பத்துப்பதினைந்து பெண்கள் ‘நட்டுக்’ கொண்டிருந்தார்கள். முக்கால்வாசிப்பேர் கல்யாணமாகாதவர்கள், கல்யாணமாகாத பெண்களில் எல்லோரும் இளம் பெண்கள் அல்ல. இளம் பெண்களில் எல்லோரும் அழகிகளும் அல்ல. அழகிகளில் எல்லோரும் அடக்கமானவர்களும் இல்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் நாலைந்து பெண்களுக்கு வயது, அழகு, பண்பு ஆகிய மூன்றிலும் முப்பத்தைந்துக்கு மேல் மார்க் போடலாம்.

கிணற்றடியில் நாற்றங்காலில் இருந்து பத்துப்பதினைந்து நாற்றுக்கற்றைகளை அருகில் வைத்துக்கொண்டு, ஒரே ஒரு நாற்றுக்கற்றையை மட்டும் இடது கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாற்றையும் வலதுகையால் எடுத்து வயலுக்குள் ஊன்றிக்