பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒறுக்கப் பட்டு....

133



சட்டாம்பட்டியிலிருந்து. வீட்டுக்குப் புளியந்தோப்பு வழியாக வரும்போது, பொதுவாக வெளியே போகாமல், 'அரங்கு' வீட்டுக்குள்ளேயே முடங்கி முடங்கிக் குறுகிப்போன சரோஜா, அங்கே நின்றுகொண்டிருந்தாள். லோகுவுடன் நடக்கவிருந்த கலியாணம் நின்றுபோன பிறகு இப்போதுதான் இவள், அவளைப் பார்க்கிறாள். உலகம்மை, மான்குட்டி மாதிரி துள்ளிக்கொண்டு, சரோசாக்காவைப் பார்த்து ஓடினாள். இவ்வளவு நாளும் அக்காவைப் பார்க்க முடியாமல், அடக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி, இரண்டு இறக்கைகளாகி, அவள் இடுப்பின் இருமருங்கிலும் ஒட்டிக்கொண்டதுபோல் 'பறந்தாள்'!

ஆனால், ஈரோஜா இவளை முறைத்துப் பார்த்தாள். பிறகு "தூ வெட்கங்கெட்ட நாயிங்க! அடுத்துக் கெடுக்கிற முண்டைங்க மானங்கெட்ட கழுதைங்க!" என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே, மாறிமாறிக் காறித்துப்பினாள். உலகம்மையின் சிவப்புமுகம், கறுத்தது. வழியேபோன அவமானத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட பேரவமானத்தில், அவள் வீட்டைப்பார்த்து மெதுவாக நடந்தாள், அய்யாவிடம் சொல்லக்கூடாது என்று இருந்தாலும், அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மாயாண்டி, சமாதானம் சொன்னார்:

"சரோசாள தப்பா நினைக்காத. தங்கப்பழத்த கட்டிக்கிட அவளுக்கு இஷ்டமில்லன்னு தெரியுது. அதனால், ஒன்னாலதான இந்த நிலமன்னு கோபப்பட்டிருப்பார் அவா ஒன்னத் துப்பல! தங்கப்பழத்தத்தான் துப்பியிருக்கா"

மாயாண்டிகூட, சொல்லிவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு. வேதனையோடு சிரித்தார். அந்த வேதனையில் ஒரு பகுதி சரோஜாவிற்காகச் சேர்ந்து கொண்டது.

உலகம்மையும் ஓரளவு சமாதானம் அடைந்தாள். இருந்தாலும், சரோஜா, அவள் மதிப்பிலிருந்து நான்கைந்து குண்டுமணி தாழ்ந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஏனோ அவள் லோகுவை சதா நினைத்தாள். "சரோசாக்காவுக்கு துரோகம் பண்ணப்படாது" என்று அடக்கி வைத்திருந்த காதல், இப்போது அவளுக்கு 'லைன்' கிளியராகிவிட்டதாகவும், காறித்துப்பிய சரோஜாவைப் பழிவாங்குவது மாதிரியும், பொங்கிவரும் காட்டாறாய் வெளிப்படுவது அவளுக்குத் தெரியாது.