பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஒரு கோட்டுக்கு வெளியே ...



ஊரார் ஒதுக்குகிறார்கள் என்பதற்காக, நாளடைவில் தானாக ஒதுங்கிக்கொண்ட உலகம்மைக்கு, இப்போது தனிமை ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. லோகு. அவளோடு எப்போதும் இருந்தான். ஆடை உடுக்கும்போதுகூட, லோகு உற்றுப் பார்ப்பது மாதிரி அவளுக்குத் தெரியும். அவளை அறியாமலே, கன்னங்கள் சிவக்கும். மலக்காட்டுப் பாதையைக் கடந்து தோட்டத்துச் சுவரில் ஏறும்போது, ஏற்கனவே லோகு அதில் ஏறிக்கொண்டு, அவள் கையைப் பிடித்துத் தூக்கி விடுவதுபோல் நினைத்துக்கொள்வாள். சட்டாம்பட்டி ஜனங்கள் அனைவரையும், சொந்தக்காரர்களைப்போல் பார்ப்பாள். லோகுவின் அய்யாவை, அவருக்குத் தெரியாமல் தெரிந்து வைத்திருந்தாள். அவரைப் பார்க்கும் போதெல்லாம், இவள் வழிவிடுவதுபோல், மரியாதையாக ஒதுங்கிக் கொள்வாள்.

லோகு, அவளுக்குப் பட்டுச்சேலை எடுத்து வந்தான், அதை அவனே, கட்டிவிட்டான். அவனுக்கு அவள் சோறு போட்டாள். செல்லமாகச் சிணுங்கிய அவன் வாயில் ஊட்டிவிட்டாள். அவன், ஒரே தட்டில் அவளும் 'சாப்புடனும்' என்று அடம் பிடித்தான். அவள் இறுதியில் சம்மதித்தாள். உணவைப் பிடிக்கிற சாக்கில், அவள் கையைப் பிடித்தான். அவள் சிணுங்கினாள். 'சாப்பிட மாட்டேன்' என்று கையை வெளியே எடுத்தாள். அவன் உடனே, அவளுக்கு ஊட்டிவிட்டான். இருவரும் தங்கள் குழந்தைகளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு குற்றாலத்திற்குப் போனார்கள். ஈரப்புடவையோடு எக்கச்சக்கமாக நின்ற அவளிடம், அவன் 'டிரங்க்பெட்டியில் இருந்த புடவையை எடுத்து நீட்டினான். "இவ்வளவு நேரமும் என்ன பண்ணுனிங்க?" என்று அவள் அதட்டினாள். இருவரும் கைகோத்தபடி, மலையருவிக்கு எதிரே இருந்த புல்வெளிக்குப் போனார்கள். குழந்தையைத் தோளில் வைத்துக்கொண்டு நின்ற அய்யாவையும், * நேரமாயிட்டு' என்று சொன்ன மாமனாரையும், செல்லமாகத் திட்டிக்கொண்டே. அவர்கள் எழுந்திருக்க மனமில்லாமல் எழுகிறார்கள், கிழவர்களுக்குத் தெரியாமல், அவள் இடுப்பைக் கிள்ளினான். அவள் சிணுங்குகிறாள். சிரிக்கிறாள். பிறகு அவளும் கிள்ளுகிறாள். அவன் பதிலுக்குக் கிள்ளுமுன்னால் கிழவர்களுக்கு முன்னால் போய் நின்றுகொண்டு, பின்னால் நிற்கும் அவனுக்கு 'அழகு' காட்டுகிறாள்!

வாழ்வே மாயம் என்கிறார்கள். மாயையான வாழ்வில் வாழும்போது, இன்னொரு மாயையான கற்பனையில் ஏன் அவள் வாழக்கூடாது? அதில் சூதில்லை, வாதில்லை , சுற்றுப்புற மலக்காடும்