பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒறுக்கப் பட்டு....

137



இவருக்குத்தான் எல்லாந் தெரியுமோ என்ன எழுதியிருப்பாரு சரோசான்னா...? ஒலகம்மான்னா?'

உலகம்மை, படிக்க முடியாத கடிதத்தைப் படிக்கத் துடித்தாள். முட்கம்பிக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.

தபால்காரப் பையன், பத்து வரைக்கும் படித்தவன். உள்ளூர் பார்ட் டைம் போஸ்ட்மாஸ்டரின் சார்பில், தபால்களைப் பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறான். அவர் தயவில், போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக மாறிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பவன். கழண்டு போன சைக்கிள் செயினை அவன் மாட்டிக் கொண்டிருந்தான், உலகம்மை அவனிடம் பேசினாள். அப்படிப் பேசும்போது நாணினாள்.

"அப்பாவு, இதுல என்ன எழுதியிருக்குன்னு படிச்சுக் காட்டேன்! சீக்கிரமாப் படி செயின அப்புறமா மாட்டலாம். ஒன்னத்தான, ராசா."

தபால் பையன், இதற்குள் செயினைப் போட்டுவிட்டு, 'ஸ்டாண்ட்' போட்ட சைக்கிளை உருட்டப்போனான். உலகம்மை சொன்னது கேட்காததுமாதிரி, சைக்கிள் பெடலில் கால் வைத்தான். உலகம்மை விடவில்லை .

"ஒன்னத்தான் தம்பி! என்ன ஒன் அக்காமாதிரி நெனச்சுக்க. படிப்பா !"

தபால் பையன். அவளைக் கூர்ந்து நோக்கினான்.

"என்ன நீ பேசுறது? ஒன்கிட்ட பேசுனாலே உத குடுப்பாவ. லட்டர வேற படிச்சிக்காட்டச் சொல்றியா? நான் ஊர்ல நல்லபடியா லாந்துறது ஒனக்குப் பிடிக்கலியா?"

தபால் பையன் பெடலை அழுத்தி, சைக்கிளில் ஏறினான். சக்கரங்கள் சுழன்றன - உலகம்மையைப் போல.

"யாரிடமாவது காட்டவேண்டுமே? யாரிடம் காட்டலாம்? பாவி மனுஷன் தமிழில் எழுதித் தொலைச்சா என்ன?"

‘சுயதேவைப் பூர்த்திக்கும்' 'தன்னிறைவுக்கும்' ஒரு யுகமே ஒரு நிமிடமாக வரவேண்டிய அளவிற்கு இயங்கி வந்த உலகம்மைக்கு, இப்போது ஒவ்வொரு நிமிடமும். ஒரு யுகமாகத் தோன்றியது.

கோ.10.