பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்றது பற்ற...

131



வந்தது. அவன் அவளைவிட ரெண்டு வயது அதிகமாகவே இருப்பான். நல்ல பையன், அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் படும் கஷ்டங்கள் அத்தனையும் தெரிந்தவன்போல், அனுதாபமாகப் பார்த்துக்கொண்டும், ஒருவித நமுட்டுச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டும் போவான்.

அந்தச் சேரி ஊருக்குத் தெற்கே சற்றுத் தள்ளி, குளத்துக்கரையின் கிழக்குப் பக்கமாக இருந்தது. நெல்லிக் குவியலிலிருந்து சிதறி ஓடிய காய்கள் போல் ஐம்பது, ஐம்பத்தைந்து குடிசைகளும் நாலைந்து 'காரை' வீடுகளும் அங்கேயும் இங்கேயுமாக இருந்தன. ஓடைத்தண்ணிக் கசிவு, அந்தச் சேரியின் சந்து பொந்தெங்கிலும் கணுக்கால் உயரத்துக்குப் பரவியிருந்தது.

பாரதம் கிராமங்களில் வாழ்வதாக பல தலைவர்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், அந்தக் கிராமங்கள் - சேரிகளில் வாழ்கின்றன என்கிற உண்மை , இன்னும் பலர் காதுக்கு எட்டவில்லை !

அடம்பிடிக்கும் சில சின்னஞ்சிறு குழந்தைகள், அந்தத் தண்ணீருக்குள் விழுந்து மீன் மாதிரி புரண்டு கொண்டும். தவளை மாதிரி கத்திக்கொண்டும் கிடந்தன. பலமான மழையினால் பல சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டிருந்தது. சுவர்களை ஒட்டிய சின்னத் திண்ணைகளில், பக்கத்தில் இருந்த ஈயப் போணிகளில் கைகளை விட்டுக்கொண்டே, பல குழந்தைகள் கைகளை நக்கிக் கொண்டிருந்தன. சில பிள்ளைகளின் வயிறுகள் உப்பிப்போயும், கழுத்துக் குறுகிப்போயும், கைகால்கள் குச்சிகள் போல் ஓணானின் கால்கள் மாதிரி துவண்டும் கிடந்தன. பெரும்பாலான குழந்தைகள் 'அரணைக்' கயிறுகள் கூட இல்லாமல் நிர்வாணமாக உட்கார்ந்திருந்தன. ஓலைக் கூரைகளில் இருந்து விழும் இற்றுப்போன ஓலைப் 'பாசில்களும்' மண்கட்டிகளும் தலைகளிலும், தோள்களிலும் விழுந்து, ஆடையில்லாத அந்தக் குழந்தைகளின் மேனிக்கு ஆபரணங்கள் போல் தோன்றின. காலையில் போன அம்மாக்கள். மாலை வரும்வரை, ஈயப் போணிகளில் கைகளை விட்டுக் கொண்டும், பிறகு வயிறு நிறைந்த குஷியில், கழிவு நீரில், புரண்டு விளையாடிக் கொண்டும் இருப்பது அந்தக் குழந்தைகளின் வாடிக்கையான வேடிக்கை. குடும்பநலத் திட்டத்துக்காக, சத்துணவு இல்லாத குழந்தைகள் எப்படி இருக்கும் என்பதை பாரதப் பிரஜைகளுக்கு விளக்குவதற்காக, 'பிலிம் டிவிஷனும்' மாநில அரசின் திரைப்படப்