பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பிறகுதான், இதர உணர்வுகள் ஏற்பட முடியும் அல்லது ஏற்படுத்த முடியும் என்பது இந்த இளைஞர்களுக்குத் தெரியாது. பிரச்சினை களை உணர்வுபூர்வமாகச் சிந்தித்து, அறிவுபூர்வமாகப் பார்க்க மறந்த இவர்களும், இவர்களுக்கு முந்திய ஜெனரேஷனைச் சேர்ந்த படித்த இளைஞர்கள்போல், நகரங்களில் போய் ஒருவேளை முடங்கிக் கொள்ளலாம் என்றாலும் இப்போதைக்கு, அப்படி முடங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், அவ்வப்போது 'அதட்டிக்' கொண்டிருப்பவர்கள் இவர்கள். ஆனால் அருணாசலம் இப்போது கொஞ்சம் சிந்திக்கத் துவங்கிவிடுகிறான்.

ஊரையும், சேரியையும் பிரித்துவைக்கும் ஓடைக்கரைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாக, அந்தக் கரைகளை இணைப்பதுபோல் நெருக்கிப் போடப்பட்டிருந்த நான்கைந்து பனங்கம்புகள் வழியாக நடந்து, எலிவளை போல, கோணல்மாணலாக இருந்த தெருக்கள்' வழியாக உலகம்மை நடந்து போனபோது, "நாடாரம்மாவா, நாடாரம்மாவா, வாங்க! ஏ, யார் வந்திருக்கான்னு பாருங்க, பாருங்க" என்று பல பெண்கள் அவளைச் சுற்றிக்கொண்டார்கள். "மாயாண்டி நாடார் மவளா? வாங்கம்மா" என்று சொல்லிக்கொண்டே. சில கிழவர்கள் மரியாதை தெரிவிக்கும் வகையில், நீட்டி வைத்திருக்கும் கால்களை இழுத்துக்கொண்டார்கள். மாயாண்டி, பனையேறிக்கொண் டிருக்கும்போது, அவரிடம் போய் 'கூட மொனைய பனையோலைகளை வாங்கிக் கொண்டிருந்ததையும், நாடாரே, பனைமட்டைகளில் இருந்து நாரைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்ததையும், அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டபோது, உலகம்மை, 'எல்லா மனுஷனும் மோசமல்ல' என்று அய்யா ஒருதடவை சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

ஒரு பெண், ஓலைத்தடுக்கு ஒன்றைத் திண்ணையில் போட்டு அவளை உட்கார வைத்தாள். சுற்றிலும் பெண்கள் நின்று கொண்டார்கள். பெரிய ஆடவர்கள், கொஞ்சம் தூரத்தில் நின்று, தங்களுக்குள் பேசிக்கொண்டாலும், அவர்கள் கண்கள் என்னமோ, உலகம்மை மீதும், அவளைச் சுற்றி நின்ற கூட்டத்தின் மீதும் மொய்த்தன. உலகம்மைகூட, அவர்கள் காட்டிய அன்பில், வந்த வேலையில் அதிக அவசரம் காட்டவில்லை . சரமாரியாக அவளிடம் கேட்கத் துவங்கிவிட்டார்கள் :

"ஏம்மா ஒங்களுக்கு வம்பு? சாதியோட சனத்தோட சேராம இப்டி தள்ளியிருக்கது மொறையா?"