பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்றது பற்ற...

143



அண்ணாவி மேல் ஜாதிக்காரங்களுக்கு அவரு போடுற சலூட்டு கண்றாவி!"

உலகம்மை உட்பட, எல்லாப் பெண்களும் சிரித்தார்கள். ஆனால் ராமக்காவால் அதிக நேரம் சிரிக்க முடியவில்லை. கொஞ்சஞ் சிரித்ததுக்கு ஈடுகட்டுவது மாதிரி எகிறினாள்:

"ஒன்ன மாதிரி ஏட்டுச் சொரக்காய்க எத்தனை பேர இந்தச் சேரி பாத்துருக்கு தெரியுமா? இப்ப இவ்வளவு பேசுற? வேல கெடச்சதும் ஊரையே மறந்துடப்போற. அவன் கருப்புசாமி ஒன்னவிட அதிகமாக் குதிச்சான். இப்ப மெட்ராஸ்ல முதலியார்னு சொல்லிக்கிட்டு ஊரையே மறந்துட்டான். அவனாவது பரவாயில்ல. செங்குந்தன் மெட்ராஸ்ல ஆப்சரா இருக்கான். நாடார்னு சொல்லிக்கிடுறானாம். ஊர் ஜனங்க நம்மள வெளில நிறுத்துறது மாதிரி அவனப் பாக்கப் போன சேரியாளுவள வெளியில் நிறுத்திப் பேசி அனுப்பிடுறானாம். சும்மா குலாவாத ராசா. மொதல்ல எல்லாரும் பட்டையில் போட்ட நண்டு மாதுரிதான் துடிப்பாங்க. அப்புறம் முதலியாரு, நாடாரு. இல்லன்னா செட்டியாரு!"

உலகம்மை, அவன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்பதை அறியும் ஆர்வத்தில், அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் பேசாமல், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தான். "நீ, நீங்க இதுக்கு என்ன சொல்ற... சொல்றீக" என்று நாக்கைக் கடித்துக்கொண்டே கேட்டாள், அவன், மீண்டும் சிலிர்த்துக்கொண்டு பேசினான்:

"அவங்க சொல்றது சரிதான். ஹரிஜன்னு சொல்லிக்க பெருமப்படலாம். ஆயிரக்கணக்கான வருஷமா அடக்கப்பட்டிருந்தவங்க அடிமைத்தனத்தையும் மீறி, முன்னுக்கு வாரத நெனச்சி பெருமைப்படணும். வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் கால்ல விழுந்த விலங்கோட ஓடி ஜெயிச்சதுக்கு பெருமைப்படணும். ஆனால் எங்க ஆட்கள் பி.ஏன்னு சொல்லிக்கதை விட முதலியார்னு சொல்லிக்கதுல பெருமப்படறாங்க. படிக்காத ஹரிஜனங்கள் மேல்சாதிக்காரங்களைவிட கேவலமா நடத்துறாங்க. இவங்களால ஹரிஜன சமுதாயத்துக்கே கெட்டபேரு. அவங்க உத்தியோகத்துக்கு ஏதாவது இடஞ்சல் வரும்போதுதான், ஹரிஜன்னு சொல்லி கவர்னர் கிட்ட மனுக் குடுக்கராங்க, அரசாங்கம் ஹரிஜனங்களுக்குச் சலுகை பண்றது, இவங்க சேரிக்குப் பணத்த வெட்டிக் குடுப்பாங்கன்னு நினைத்து அல்ல, ஹரிஜனங்க படிச்சா அவங்க சமுதாயத்துக்கு ஒரு 'ஸோஷியல் ஸ்டேடஸ்'