பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்றது பற்ற...

147



உலகம்மைக்கு அவன் பேச்சில், இப்போது அதிகச் சூடு இருப்பது போலவும், அவனுக்குத் தெரிந்தும் தெளிவில்லாமல் மங்கிப் போயிருக்கும் விஷயங்கள் வெளியே வரத் துவங்கியது போலவும் தோன்றியது. ஏதோ கேட்கப் போனாள். அதற்குள் இதர பெண்கள் அவளிடம் பேசத் துவங்கினார்கள்.

"நாடாரும்மா எதாவது சாப்புடுறீங்களா? ஒங்களப் பறக்குடியில சாப்புடச் சொன்னத தப்பா நெனைக்காதீங்க. ஒங்க வயிறு 'கொலுக்கா' இருந்ததப் பார்த்ததும் மனசு கேக்கல. சாப்புடுறியளா? ஏல ராமு, வாழ இல பறிச்சால."

உலகம்மை வேண்டாம் என்பது போல் தலையை , ஆட்டிவிட்டு, கடிதத்தை எடுத்து, அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு "தெரிஞ்சவங்க ஒருவர் எழுதியிருக்கார்னு நெனக்கேன்" என்று சொல்லிவிட்டு, அருணாசலம் 'பப்ளிக்கா' பானையை உடைக்கதுமாதிரி உடைத்துவிடக் கூடாதே என்று பயந்தாள். படித்த பையனான அருணாசலம், அவளிடம் தனியாகச் சொல்லுவான் என்று நினைத்துக்கொண்டு, ஆறுதல் அடைந்தாள்.

அவன் அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, அவள் தன் இதயத்தைப் பிடித்துக்கொண்டாள். அது அடித்துக்கொண்டது. உடம்பெல்லாம் இன்பக் கிளுகிளுப்பில் துள்ளியது.

படித்து முடித்த அருணாசலம், சிறிதுநேரம் பேசவில்லை . 'அப்படின்னா அவருதான் ஆசைய சொல்லி எழுதியிருக்காரு' என்று உலகம்மை நினைத்தபோது இதர பெண்கள் "சத்தமா படிச்சிச் சொல்லேன். அப்பாவு ஏன் முனங்குற. மெத்தப் படிச்சவன் சுத்தப் பயித்தங்றது சரிதான்" என்றார்கள்.

அருணாசலம் உலகம்மையையே உற்று நோக்கினான்.

"மனச தைரியமா வச்சுக்கங்க. பலவேச நாடாரு வக்கீல் நோட்டீசு அனுப்பி இருக்காரு. அவரோட இடத்த ஆக்ரமிச்சி, அதாவது என்குரோச்மென்ட் செய்து குடிசை போட்டிருக்கிங்களாம். இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாளையில் காலி பண்ணலன்னா, வழக்குப் போடுவாராம். கவலப்படாதீங்க, பதில் நோட்டீஸ் கொடுக்காண்டாம். பலவேசம் வழக்குப் போடட்டும். எப்டியும் ஒரு வருஷம் தள்ளும். அதுக்குள்ளே ஏதாவது வழி பிறக்கும்."