பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்றது பற்ற...

149



"இன்னிக்கே எங்க குலதெய்வம் மதுரவீரனுக்கு ஊதுபத்தி கொளுத்திக் கேக்கிறேன். கலங்காதீங்க" என்றாள் மற்றொரு பெண்.

"வக்கீல் நோட்டிஸ் எங்கிட்டவே இருக்கட்டும்" என்றான் அருணாசலம்.

உலகம்மை எழுந்து கொண்டாள். மெள்ள நடந்தான். தேங்கி நின்ற நீருக்குள், நீர்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே இருந்த கருங்கற்கள் மீதும், செங்கல்கள் மீதும் நடக்காமல் நீருக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள்.

பெரும்பான்மையான பெண்கள், அவளை ஒடைவரைக்கும் வந்து வழியனுப்பினார்கள். "நாங்க சாதில தாழ்ந்தவங்க. அதனால எங்கள ஒங்க அக்கா தங்கச்சி மாதிரி நினைக்காட்டாலும் பழகுனவளுன்னு நினைச்சி அடிக்கடி வாங்கம்மா" என்று ஒருத்தி சொல்ல, இதர பெண்கள் தலையை ஆட்டினார்கள். தூரத்தில் அவள் போவதையே பார்த்துக்கொண்டு அருணாசலம் நின்றான்.

மெள்ள நடந்த உலகம்மை, ஓடையைக் கடந்ததும் வேகமாக நடந்தாள். உடலுறுப்புகள் அனைத்தும் அறுந்து, அக்குவேர் ஆணிவேராக ஆனதுபோல் வலியெடுத்தது. கால்கள் - இரண்டும் மேல்நோக்கி வருவதுபோலவும், தலை தோள்பட்டையோடு சேர்ந்து கீழ்நோக்கி வருவதுபோலவும், ஒருவித வலி தோன்றியது. அங்கங்கள் அனைத்தும் சிதறி, சின்னாபின்னமாகி, ஒன்றோடொன்று மோதி, கூழாகி, வெறும் முண்டமாக, பிசைந்து போடப்பட்ட கேழ்வரகு மாவைப்போல் உருவந்தெரியாமல் கரைந்து போவது போன்ற நரக வேதனையுடன் அவள் நடந்தாள்.

'இதுக்கு மேல் என்ன நடந்தாலும் அது பெரிதாக இருக்க முடியாது' என்ற உணர்வு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. வக்கீலின் நோட்டீஸ் என்பதைவிட, அது லோகுவிடம் இருந்து வராத கடிதம் என்ற உண்மை , அவள் மனதை பெரிதும் மாய்த்தது. ஏனோ மெட்ராஸ் போக வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்து குரல் கொடுத்தே, அய்யாவை அழைத்துக்கொண்டு. அங்கிருந்தே, அந்த நேரத்திலேயே, அப்படியே போகவேண்டும் போல் நினைத்தாள்.