பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஒரு கோட்டுக்கு வெளியே ...


“ஒன்னத்தான பாட்டி..”

“எனக்கு இன்னும் முப்பது கூட முடியல. ஒனக்கு நான் பாட்டியா? இதுக்குத்தான் ஒன்னை பிராந்...”

“என்ன சொன்ன? பிராந்தன்னு சொல்றியா? உன்ன...”

“வெள்ளைச்சாமி, இந்த சட்டை நல்லா இருக்கே. எங்க எடுத்த இது ஒன்ன ராசா மாதிரி காட்டுது.”

“இது தென்காசில எடுத்தேன்.”

வெள்ளைச்சாமி கிணற்றுப் பக்கம் போய்விட்டான். பெண்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். “பிராந்தன சமாளிச்சிட்ட” என்றாள் உலகம்மை.

“பிராந்தனுக்குக் கோபம் வந்ததுன்னா, நெலயா நிப்பான். நல்லவேள, பேச்சு மாத்திட்ட” என்றாள் இன்னொருத்தி.

குத்துக்காலில் சாய்ந்து கொண்டு, இளம் பெண்களை, குறிப்பாக உலகம்மையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி, அவனைப் பார்த்து அவளும் சிரிப்பதை காதல் சகுனமாக எடுத்துக்கொண்டான். அவளிடம் “பவுசு” காட்டும் வேகத்தோடு, “அகலமா நடுங்கன்னா, கேக்க மாட்டிங்கியள, அகலமா நடுங்க” என்றான்.

“இதுக்கு மேல அகலமா நட்டா, அடுத்த வயலுல போயிதான் நடணும். பிராந்தன் கத்துறதப் பாரு. உலகம்ம ஒனக்கு என்னழா கேடு? ஏன் இப்படிச் சிரிக்கிற?”

“பிராந்தன் குடும்பக் கட்டுப்பாட்ட பிரச்சாரம் பண்ணுரத நெனச்சதும் எனக்குச் சிரிப்பா வருது.”

“விபரமாச் சொல்லிட்டுச் சிரியேன், பிள்ள.”

“நேத்து நம்ம ஊர்ல யாரோ வந்து சினிமா போட்டாங்கல்ல. அதுல ஒரு ஆளு நாத்த அகலமா நடுறதுமாதிரி பிள்ளியள இடவெளிவிட்டுப் பெத்தா பிள்ளைக்கும் நல்லது, தாயிக்கும் நல்லதுன்னார். அதைப் பிடிச்சுக்கிட்டு இவன் குதிக்கிறான்.”

“ஒ. அதுதான பார்த்தேன். பிராந்தனுக்கு நாத்த அகலமா நடுறது எப்டி தெரியுமுன்னு நெனச்சேன். சரியாச் சொல்லிட்ட. ஆமா, நீ பீடிசுத்திக்கிட்டு இருந்துட்டு இதுக்கு ஏன் வந்த? அதுல இதவிட அதிக ரூபா வருமே?”