பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதுங்கி வாழ்ந்து...

153


மட்டுமல்ல அவமரியாதையாகவும் நடத்தக்கூடிய செயலாகக் கருதப்பட்டது.

நிலமில்லாத சிலர், உலகம்மை வீட்டுக்குப் போகும் ஹரிஜனங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார்கள். நிலமுள்ள மாரிமுத்து வகையறாக்கள். “ஊர் விவகாரம் வேற, வயல் விவகாரம் வேற” என்று சொல்லி விட்டார்கள். அவ்வளவு லேசான கூலிக்கு, அந்தச் சேரி ஆட்களை மாதிரி, வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெரிய விஷயமும் நடந்தது. பயங்கரமான வெள்ளத்தால், நெல்லை மாவட்டமும், இதர மாவட்டங்கள்போல பலமாகப் பாதிக்கப்பட்டது. குட்டாம்பட்டிக் குளத்திற்கு, ராமா நதியின் உபரி நீர் விரைவில் வெள்ளமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், குளம் உடையாமல் இருக்க, மதகைத் திறக்கும்படி ஹரிஜனங்கள் சொன்னதை ― அதனால் தங்கள் சேரி அழியும் என்று சொன்னதை ― நிலப்பிரபுக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதை ஆட்சேபித்து, அருணாசலம், மதகுக்கருகே ஒரு கட்டிலைப் போட்டுப் படுத்துக்கொண்டு, சேரி மக்களின் பேச்சையும் கேட்காமல், சாகும்வரை அல்லது மதகுகள் திறக்கப்படும் வரை, இந்த இரண்டில் எது முன்னால் வருகிறதோ அதுவரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, படுத்துக்கொண்டே அறிவித்தான். அந்த அறிவிப்பு இரண்டு தெருக்களுக்குமேல் பரவாமல் இருந்த சமயத்தில், எப்படியோ அதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஹெட்கான்ஸ்டபிள், வயதான சப் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, அருணாசலத்தை அரசாங்க விருந்தாளியாக்கினார். இதுவரை “கிறுக்குப் பய மவன், எக்கேடாவது கெடட்டும். பட்டாத்தான் தெரியும்” என்று முனங்கிக்கொண்டிருந்த சில ‘பட்டுப்போன’ சேரிக்கிழவர்கள்கூட, கிளர்ந்தெழுந்தார்கள். ஒருவர்கூடப் பாக்கியில்லாமல், போலீஸ் நிலையத்தில், அருணா சலத்தைப் பார்க்கப் போனார்கள். அதை முற்றுகையாகக் கருதிய வயதான சப்-இன்ஸ்பெக்டர், ஒழுங்காக ரிட்டயராகக் கருதி அருணாசலத்தை விடுதலை செய்தார். அருணாசலம், மீண்டும் வந்து மதகுப் பக்கம் படுத்துக்கொண்டான். இப்போது சேரிமக்கள். அவன் பக்கத்திலேயே நின்றார்கள். சேரி அழியாமல் இருப்பதற்காக, அவன் தன்னை அழித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறான் என்பதை உணர்ந்ததும், அவர்களும் இரண்டிலொன்றைப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தவர்களாக ஒன்று திரண்டு, அவனருகேயே நின்றார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோஷங்கள் தெரியாது. சிலர், பண்ணையார்கள் வயல்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும்
கோ.11.