பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19. பாடை விரிந்திட...

யிரையே பணயமாக வைத்த ஒருவனுக்கு வாழைப்பழம் கொடுத்ததால் புதிய விரோதம் முளைத்த, அது பழைய விரோதத்துடன் சேர்ந்து கொண்டதைப் புரிந்துகொண்ட உலகம்மைக்கு, ஒன்றும் ஓடவில்லை. தெருக்களில் அவளிடம் பேசாவிட்டாலும், சிநேகித பாவத்துடன் சிரித்துக்கொண்டுபோகும் சிலர்கூட, இப்போது அவளைப் பார்த்ததும், பல்லைக் கடித்துக் கொண்டு போவதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். ஒற்றையடிப் பாதைக்கு அசிங்கம் மேலும் பயங்கரமாகியது. இதுவரை வெள்ளைச்சாமியும், ராமசாமியுந்தான் அவள் போகும்போது கீழ்த்தரமாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். இப்போதோ, பாதிக் ‘காலியாகவும்’, பாதி நல்லவர்களாகவும் இருந்த இதர பிள்ளையாண்டான்களும், ‘முழுக் காலிகள்போல்’ அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஆபாசமாகப் பேசுவது. நன்றாக அளவுக்கு அதிகமாகவே கேட்டது. அந்தப் பிள்ளையாண்டான்களின் அய்யாமார்களில் சிலரும் இந்தக் கோரலில் சேர்ந்து கொண்டார்கள்.

உலகம்மை, ‘அருணாசலத்திற்கு ஏன் ‘வாளப்பளம்’ கொடுத்தோம்?’ என்றுகூட நினைத்துக்கொண்டாள். பிறகு, அப்படி நினைப்பது நன்றிகெட்டதனமாகவும் அவளுக்குத் தெரிந்தது.

‘அய்யா கோட்டுக்குள்ள நிக்கையில ஏன்னு கேக்கல. நடந்த விஷயத்துல பாதியக்கூட போலீஸ்ல சொல்லல. அய்யாவ ஏட்டு இழுத்துக்கிட்டுப் போகையில ஒருவன்கூட ஏன்னு கேக்கல. ஏன்னு கேட்டவள அபராதம் குடுன்னு சொல்லும்போது ஊர்ஜனமே ஒண்ணாயிட்டு. ஓடோட விரட்டுறானுக. ஒருவனுக்குக்கூட நியாயம் தெரியல. தெரிஞ்சவனும் ஒதுங்கிப் போறான். இவங்களுக்குப் பயந்துகிட்டு எதுக்காவ இருக்கணும்? அப்பப்போ வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போற அருணாசலத்தவிட இவனுக எந்த விதத்துல உசத்தி’

உலகம்மை, தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டாலும், எந்தவித விரோதத்திற்கும் காரணமில்லாத, அவளைப்போன்ற ஏழை எளியவர்கள்கூட, அவளைப் பயங்கர எதிரியாகக் கருதுவதைத்தான் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்து கொள்வதற்காக அவள் சிந்தித்தபோது தலைவலித்ததுதான் மிச்சம்.

ஆண்டாண்டுக் காலமாக, வறுமைக் குப்பையில் நெளியும் புழுக்களாக மாறிப்போன ஏழை எளியவர்கள், தற்காப்பு உணர்வும்,