பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பாவி’ இறந்திட...

173


‘தோட்டத்துல மோகினி மாதிரி’ என்று முன்பு சொன்னவர்கள், உலகம்மையுடன் பழகிய பிறகு, அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்பதை உணர்ந்ததுடன், அவள் அப்படிச் செய்ததிலும் ஒரு தர்ம நியாயம் இருப்பதை உணர்ந்து, அவளுக்கு ஒருவகை தனிப்பட்ட மரியாதையையும் கொடுத்தார்கள். உலகம்மை பேசுவாளா என்று அவள் வாயையே பார்த்தார்கள்.

உலகம்மை பேசவில்லை.

உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலிப்பதுமாதிரி தெரிந்தது. சின்ன வலியா, பெரிய வலியா என்று தெரியவில்லை. அவள். அந்த நெற்பயிர்களையே வெறித்துப் பார்த்தாள். முன்பு தொட்டால் துவண்டு விடுவதுபோல் இருந்த அதே பயிர்கள், இப்போது நிமிர்ந்து உறுதியோடு நிற்கின்றன. முன்பு குனிந்துகொண்டு பயிர்களுக்குக் களையெடுத்தவள். இப்போது நிமிர்ந்து நின்று உரம் போடுகிறாள். உரம் போடும் அவள் மனதும், ‘உரமாகியிருந்தது’, இலையும், செடியும், மண்ணும் மரமும், பூமிக்குள் ஒன்றோடொன்று மோதி அவை அற்றுப்போயும், இற்றுப்போயும், உரமாகி விடுவது போல், அவள் உள்ளத்து உணர்வுகள் ‘இனியொரு எண்ணம் விழ இடமில்லை’என்பதைப்போல், உள்ளத்தை நெருக்கமாக அடைத்திருந்த எண்ணங்கள். ஒன்றோடொன்று மோதி, உருக்குலைந்து, அற்றும், இற்றும். இறுதியில், அவள் உள்ளத்திற்கு உரமாகிவிட்டன. ஏமாற்றங்கள் ஏற்பட்டு ஏற்பட்டு, இப்போது ஏமாற்றம் இல்லாமல் வாழவே முடியாது என்கிற மாதிரி எதிர்மறையில் பழகிப்போன அவள், வேலையில் மும்முரமாக இருந்தாள். லோகுவை மனதில் இருந்து உதறுபவள்போல், உரத்தைக் கையிலிருந்து உதறிக்கொண்டே துவினாள்.

வேலை முடிந்ததும், வீட்டுக்குப் புறப்பட்டாள். சக பெண்கள் மத்தியில் தெரியாமல் இருந்த ஒருவித சோகம், லேசாக எட்டிப் பார்த்தது.

‘லோகுவுக்குக் கல்யாணமாமே! நல்லா நடக்கட்டும் ஒரே ஒரு தடவ அவரப் பாத்துட்டாப் போதும்! நிச்சயம் அவரப் பாக்கலாம். கல்யாண நோட்டீஸ் வீட்டுக்குக் கொண்டு வரத்தான் செய்வாரு அப்போ பாக்கலாம்!’

எண்ணத்தை விரட்டமுடியாத உலகம்மை, நடையை எட்டிப்போட்டாள். திடீரென்று அய்யா ஞாபகம் வந்தது. தோட்டக்காரனின் இறுதி எச்சரிக்கை வந்தது. பட்டச் சாராய விவகாரம் தோன்றியது. ‘பட்டகால்லயே படும்’ என்கிற எண்ணமும் வந்தது.