பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

ஒரு கோட்டுக்கு வெளியே ...



அவள் உள்ளத்திற்கே ஒரு தர்மசங்கடம். எந்த எண்ணத்திற்கு முதலிடம் கொடுப்பது? பட்டைக்கா? லோகுவுக்கா? வேலிக்கா? வம்பு பேசும் காலிகளுக்கா?

எந்த எண்ணத்திற்கும் முதலிடம் கொடுக்க முடியாமல் தவித்த அவள் உள்ளம், இறுதியில், ‘எதுக்குமே இடங்கொடுக்காண்டாம்’ என்று நினைத்து மரத்துப்போனது.

ஊர்முனைக்குச் சற்றுத் தள்ளி. மலேயாவில் பிரமுகராகவும், பிறந்த பூமியில் மாடு மேய்ப்பவராகவும் இருக்கும் ‘மலேயாக்காரர்’ மாடுகள் இல்லாமல் தன்னந்தனியாகப் பூவரசு மரம் ஒன்றில் சாய்ந்துகொண்டு நின்றார். உலகம்மையைப் பார்த்ததும் அவர் அவளிடம் ஓடிவந்தார். அவர் மூலமாகத்தான் மாரிமுத்து நாடாருக்குக் கொடுக்க வேண்டிய கடனை, உலகம்மை கொஞ்சங் கொஞ்சமாகக் கொடுத்து வந்தாள். கடன் அடைபட்டு விட்டது. மலேயாக்காரர் மூச்சை இழுத்துக்கொண்டே பேசினார்.

“ஒனக்காவத்தான் காத்திருக்கேன். ஒன் வீட்டு வாசல. அதுதான் தோட்டச்சுவர ஐவராஜா அடைக்கப்போயிருக்கான்! உடனே ஒங்க அய்யா ஊர்க்காரனுக கால்ல கையில விழாக்குறையா அழுது புலம்பினாரு! மாரிமுத்தயும் பலவேசத்தயும் பாத்துக்கூடக் கெஞ்சுனாரு. ஆனால் ஊர்க்காரன்ல ஒருத்தன்கூட ஆம்புளயா நடந்துக்கல! ஒரு பயகூட ஏன்னு கேக்கல! நீ அவங்க கால்ல விழணுமாம்! இதக் கேட்டதும் ஒய்யா வூட்டுக்குப் போயிட்டாரு! அவரு ஊர்க்காரங்களப் பாத்துக் கெஞ்சினத நினைச்சி இவ்ளவு நேரமும் அழுதேன். நான்கூட இங்க இருக்கப் போறதுல்ல! ரெட்டியார் பட்டியில மாடுமேய்க்கப் போவப்போறேன்! அங்கயாவது மனுஷங்க இருக்காங்களான்னு பாக்கப்போறேன்! ஒய்யாவ நினைச்சா, அவரு கெஞ்சினதப் பாத்தா இன்னும் ‘என் மனசு அடிச்சிக்கிறது என் மவா நடந்துபோற துசில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடா’ன்னு சொல்லிக்கிட்டே போனாரு!”

உலகம்மை, மலேயாக்காரர் சொன்னதை நம்பமுடியாதவள்போல, அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள். வேலி போடும் முயற்சியைவிட, அய்யா. ஊர்க்காரர்களிடம் சரணாகதி அடைந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை. அய்யாவுக்காகச் சிறிது வருத்தப்பட்டவள்போல் நின்றாள். பிறகு அவர்மீது சொல்லமுடியாத, தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது. எழுபது வயது வரைக்கும் வளையாத முதுகு வளைந்து விட்டதை நினைத்து கோபாவேசம் கொண்டாள். வளைந்ததா, அல்லது வளைக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், ஊர்க்காரன்