பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பாவி’ இறந்திட...

175


காலில் விழுந்த அய்யாமீது, அடங்காத சினத்தோடு, அவரை அடிக்கப் போகிறவள்போல் ஆத்திரத்தோடு நடந்தாள்.

வீட்டை நெருங்கியதும், தோட்டச்சுவரில் பாதி அடைபடாமல் இருப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. வீட்டுக்குள் போனவள், அய்யாவைப் பார்க்காதது மாதிரி பார்த்தாள். அவர் கட்டிலில் கிடந்தார். அவரை, எப்படி எல்லாமோ திட்ட வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவளுக்கு இப்போது திட்டத் தோன்றவில்லை. ஆனால் கோபமும் அடங்கவில்லை. முகத்தைத் ‘தூக்கி’ வைத்துக்கொண்டு. சிம்னி விளக்கை ஏற்றினாள். அடுப்பை மூட்டி, ஒரு ஈயப் போணியை வைத்தாள். கொஞ்சம் கருப்பட்டியையும் எடுத்துப் போட்டாள். அய்யாவின் மொகத்தைப் பார்க்கவே அவளுக்கு இஷ்டமில்லை; அவர் பேசட்டும் என்று நினைத்தாள்.

அவர் பேசவில்லை.

மனங்கேளாத உலகம்மை, அடுப்பைப் பார்த்துக்கொண்டே, அய்யாவிடம் கேட்டாள்:

“எதுக்காவ ஊர்க்காரனுக காலு கையப் பிடிக்கனும் அடச்சா அடச்சிட்டுப் போறான்! செத்தாப் போயிடுவோம்? அப்படியே. செத்தாத்தான் என்ன? ஊர்க்காரன் கால்ல விழுவுறதவிட நாம சாவுறது எவ்ளவோ மேலு!”

மாயாண்டி பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்து, அவரால் துக்கத்தில் பேச முடியவில்லை என்று நினைத்து. அய்யாவைப் பார்த்தாள். அவர் ஆடாமல் கிடந்தார். “அய்யா அய்யா” என்று கூப்பிட்டாள். பிறகு அவரை நெருங்கி, நெற்றியில் கையை வைத்துக்கொண்டு, “ஒம்மத்தாய்யா” என்றாள். பிறகு திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தொட்டுப் பார்த்தாள்: அவர் உடம்பு. அவள் உள்ளம்போல், ‘ஜில்’லென்று இருந்தது.

எழுபது வயது மாயாண்டி, ஏறாத பனையெல்லாம் ஏறிய முதியவர். ‘பயினியில்’ கிடக்கும் ஈ எறும்புகளை எடுத்துப் போட்டுவிட்டு, வருவோர் போவோர்க்குப் பட்டை செய்து பயினி கொடுத்த அந்தப் பனையேறி, திறந்த வாயில் ஈ எறும்புகள் மொய்க்க, கைகளிரண்டும் வயிற்றில் இருக்க, உடம்பெல்லாம் விறைத்திருக்க, உதடுகள் லேசாகப் பிளந்து புன்னகை செய்து கொண்டிருக்க, ஒரு யோகி மாதிரி அடிவயிற்று நெருப்பை அடக்கி வைப்பதுபோல், வயிற்றின் மேல் கைகள் ஒன்றோடொன்று கோத்து நிற்க, செத்துக்