பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவைச் சுமந்து...

179



“தெரிஞ்சிதாய்யா கேக்குறேன். நீரு கிராம ஜனங்களுக்கு ஒத்தாசை பண்றதுக்கு இருக்கிற தலயாரி. முன்சீப் வீட்டுப் பால்மாட்டை கறக்கிறதுக்கு இருக்கிற பால்காரன் இல்ல!”

முன்சீப் வீட்டு கறவை மாடுகளின் மடுக்களைத் தடவிவிட்டுப் பழகிப்போன தலையாரி, அதிர்ந்து போனார். அருகே கிடந்த டவாலியை எடுத்துப் பூணூல் மாதிரி போட்டுக் கொண்டார்.

“உலகம்மா நீ பேசுறது உனக்கே நல்லதா முடியாது!”

“இப்பமட்டும் நல்லதா முடிஞ்சிட்டாக்கும் மரியாதியா போயி முன்சீப்ப நான் சொன்னேன்னு கூட்டிக்கிட்டு வாரும். சீக்கீரமா போம். நீர் போறீரா இல்லியா? சரிசரி, வழிவிடும். நானே போறேன்.”

உலகம்மைக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்றும் அதற்குத் தான் பொறுப்பாகக் கூடாது என்றும் நினைத்து, தலையாரி உள்ளே போய், முன்ப்ேபிடம், “நாயே பேயே” என்று வாங்கிக் கட்டிக்கொண்டார். வாங்கியதை உலகம்மையிடம் திருப்பிக் கொடுக்க, ஓடோடி வந்தார்.

“இப்ப அவரால பாக்கமுடியாது வந்த வழியப்பாத்து மரியாதியா போ. இல்லன்னா கழுத்தப் பிடிச்சித் தள்ளுவேன். இன்னும் ஒன் அடங்காப்பிடாரித்தனம் போவல பாரு!”

“யோவ்! தள்ளிப்பாருய்யா பாக்கலாம் ஒன்னத்தான் தலயாரி!”

“என்னழா ஒன்னோட பெரிய இழவாப்போச்சி.”

உலகம்மை, தலையாரியை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வாசல்படியில் நின்றுகொண்டு. “கிராம முன்சீபு, சீக்கிரமா வாரும்! ஒம்மத்தாய்யா! உடனே வாரும்! வாரியரா? நான் வரட்டுமா? காது கேக்கதா, கேக்கலியா? யோவ் முன்சீப்” என்று ஊருக்குக் கேட்கும்படி கத்தினாள். இதைக் கேட்டு அக்கம்பக்கத்து ஆசாமிகள் கொஞ்சம் தொலைவில் வந்து நின்று கொண்டார்கள்.

முன்சீப், பல்லைக் கடித்துக்கொண்டும், வேட்டியை உடுத்துக் கொண்டும் வெளியே வந்தார். அவர் பெண்டு பிள்ளைகள்கூட. என்னமோ ஏதோ என்று நினைத்து, வாசலுக்கு உள்ளே நின்றுகொண்டு, தலைகளை மட்டும் வெளியே நீட்டினார்கள். “யோவ் முன்சீப்பா? செறுக்கி மவா பேசுறதப்பாரு.”

கிராம முன்சீப்புக்குச் சொல்ல முடியாத கோபம்.