பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் வயல் நட்டு...

9


தொளதொளன்னு காற்றில் ஆடியது. சிவப்பும் கருப்பும் இல்லாத மாநிறம் கொண்டவர். ஒரு பாக்கெட், ரூபாய் நாணயங்களின் கனம் தாங்காமல் தனியாகத் தொங்கியது. நரைத்துப்போன நறுக்கு மீசை, உதட்டையும் மீறி, வாய்க்குள் எட்டிப் பார்த்தது. இடது கையில் இரண்டு மோதிரங்கள் மின்னின.

நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களை உற்றுப் பார்த்தார். ஒவ்வொரு பெண்ணும் தன் வேலையைத்தான் அவர் கவனிப்பதாக நினைத்துக் கொண்டு, “இந்த அகலத்த அதிகமுன்னு சொல்லுவாரோ, இவ்வளவுதான் நட்டுயளான்னு சத்தம் போடுவாரோ” என்று சிந்தனையை வேலையாக்கியதால் வேலையில் சிந்தனை ஓடாமல் இருந்தார்கள். அவருக்குப் பயந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் உண்டு. எவளாவது சரியாக வேலை பார்க்கவில்லையென்றால், அங்கேயே அவள் கணக்கை முடித்து, சில்லறையைக் கொடுத்து அனுப்பிவிடுவார். விவகாரம் அத்தோடு நிற்காது. அதற்குப்பிறகு, அவரிடம் நல்லதுக்கோ, கெட்டதுக்கோ ‘கைமாத்து’ வாங்க முடியாது. மற்ற விவசாயிகளிடமும் “சின்னாத்தாவைக் கூப்பிடாத தட்டுக் கெட்டவ” என்று சொல்லி விடுவார்.

என்றாலும், மாரிமுத்து நாடார் யாரையும் திட்டவில்லை. உலகம்மையைச் சிறிது நேரம் உற்றுக் கவனித்துவிட்டுப் பேசினார்.

“ஏய் உலகம்மா, ஒன்னத்தான். வீட்டுல கொஞ்சம் வேல இருக்கு. எங்கூட வா. ஏமுழா முழிக்க. முழுக் கூலியும் கெடைக்கும். நாத்த போட்டுடு, வாம்மா.”

உலகம்மை என்ன வேலை என்று கேட்கவில்லை. அப்படிக் கேட்பது அவருக்குப் பிடிக்காது என்பது அவளுக்குத் தெரியும். இதர பெண்களிடமும் ‘போறேன்னு’ சொல்லாமலே, தலையை நிமிர்த்தினாள். இடுப்பில் செருகிய கணுக்கால் சேலையை எடுத்து விட்டுக் கொண்டு, நாடார் பின்னால் நடந்தாள். இருவரும் கிணற்றுப் பக்கம் வந்தார்கள்.

“ஒலகம்மா கிணத்துல குளிச்சிடு. ஒடம்புல்லாம் சவதியா இருக்கு.”

“மொகங்கால மட்டும் கழுவிக்கிறேன். சாயங்காலமாத்தான் குளிக்கணும்.”

“சொல்றதச் செய்ழா. நான் சொல்லுறேன்னா காரணமுல்லாமலா இருக்கும்? சீக்கிரமா ஆவட்டும். ராகுகாலம் வந்துடப் போவது, ஜல்தி.”